திருவண்ணாமலை, செப்.25-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடந்த ஏற்றுமதிக்கு வழி காட்டும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் துவக்கிவைத்தார்.
நாட்டின் 75வது சுதந்திர தினவிழா கொண்டாடங்களின் ஒரு பகுதியாக மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் சார்பில் வர்த்தகம் மற்றும் வணிக வாரம் நாளை 26ந் தேதி வரை மாவட்டங்கள் தோறும் அனுசரிக்க அறிவுறுத்தலின் படி திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு என்ற வகையில் மண்டல கூடுதல் இயக்குநரகம், வெளிநாட்டு வர்த்தக துறை, சென்னை மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தை ஏற்றுமதிக்கு வழி வகுக்கும் மாற்றமாக ஏற்றுமதிக்கு வழிகாட்டும் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று நடந்தது.
இந்த கருத்தரங்குக்கு வருகை தந்த அனைவரையும் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள் வரவேற்றார். மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையேற்று கருத்தரங்கினை துவக்கி வைத்து பேசுகையில் தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மேக் இன் இந்தியா போல, மேக் இன் தமிழ்நாடு என்ற குரல் ஒலிக்க வேண்டும் என ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு என்ற வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தை ஏற்றுமதிக்கு வழிகாட்டும் மாற்ற தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்களை கேட்டுக் கொண்டார்.
இம்மாவட்டத்தில் தனித்துவம் வாய்ந்த பல பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் உலகளவில் சந்தைப் படுத்த மாவட்ட ஏற்றுமதி மையம் ஒன்று திருவண்ணாமலையில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருவதாகவும் தமிழ்நாட்டில் அதிகளவு நெற்பயிர் விளைச்சல் கொண்ட மாவட்டங்களில் தி.மலை மாவட்டம் ஒன்றாக உள்ளது. ஆரணி களம்பூர் செங்கம் ஆகிய பகுதிகளில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய அரிசி ஆலைகளில் நெல் அறுவை செய்யப்பட்டு அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது.
மேலும் அரிசி நிலக்கடலை, காலணி தயாரிப்புகள், கன்வேயர் பெல்டு போன்ற பொருட்கள் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டு அதில் ஆண்டிற்கு ரூ.380 கோடி அளவில் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆரணியில் தயாரிக்கப்படும் பட்டு சேலைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.
தானியங்கி உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டு வாகன உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுப்பபட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள அரிசி நிலக்கடலை காலணி தயாரிப்புகள் ஆரணி பட்டு வாகன உற்பத்தி உதிரிபாகங்கள் வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தப்பட்ட பொருட்கள் நாமக்கட்டி, மலைத்தேன் மற்றும் மிளகாய் ஆகியவற்றை அதிகளவில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து பயனடையுமாறு தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
இதில் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் பத்மாவதி ஸ்ரீகாந்த், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆர்.மணிராஜ், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க துணைத் தலைவர் பி.நடராஜன், சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சங்க தலைவர் பி.ஜி.வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
இந்த கருத்தரங்கில் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள், ஏற்றுமதி செய்வதற்கான வழிமுறைகள், மத்திய மாநில அரசுகளால் வழங்கப்படும் சலுகைகள் பதப்படுத்தப்பட்ட வேளாண் பொருட்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்புகள், ஏற்றுமதிக்கான வங்கி கடன் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் மற்றும் நபார்டு வங்கி, ஸ்டேட் வங்கி முன்னோடி வங்கி ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி அலுவலர்கள் விளக்கி பேசினர். முடிவில் மாவட்ட தொழில் மைய உதவி இயக்குநர் ஆ.பால்ராஜ் நன்றி கூறினார்.