திருவண்ணாமலை, செப்.25-
திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் க.முருகன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் விற்பனை செய்வதற்கான உரிமம் பெற்ற சில்லரை மற்றும் மொத்த விற்பனை நிலையங்கள் 565 உள்ளன. மேலும் 120 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் விற்பனையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான யூரியா 1810 மெட்ரிக் டன், டிஏபி 1275 மெட்ரிக் டன், பொட்டாஷ் 2013 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 942 மெட்ரிக் டன், காம்பளக்ஸ் 4826 மெட்ரிக் டன், தற்போது கையிருப்பில் உள்ளன.
எனவே விவசாயிகள் தங்களுடைய சாகுபடிக்கு தேவைக்கு ஏற்றபடி ஆதார் எண்ணை பயன்படுத்தி உரங்களை வாங்கலாம். தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் உரம் வாங்கும் போது உரிய ரசீதை பெற்றுக் கொள்வது அவசியம். மேலும் விவசாயிகள் உரம் வாங்கும் போது அவர்களின் பயிருக்கு தேவையான உரங்கள் மட்டுமே விற்பனையாளர்கள் வழங்க வேண்டும். இணை பொருட்கள் அல்லது அரசு நிர்ணயம் செய்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் கிடைத்தால் விற்பனை நிலையத்தின் உர உரிமம் ரத்து செய்யப்படும். மேலும் உர விற்பனை நிலையங்களில் கூடுதல்விலைக்கு உர விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் பணியில் வேளாண் அலுவலர்கள் மாவட்டம் முழுவதும் ஈடுபட்டுள்ளனர். ஆய்வின்போது முறைகேடு கண்டறியப்பட்டால் உரக்கட்டுப்பாடு சட்டம் 1985ன்படி உரவிற்பனை உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.