விருதுநகர், அக். 30 –
இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும் பொன்னிலிருந்து மதுரை விமான நிலையம் செல்லும் வழியில் தமிழ்நாடு முழுவதும் நடைப்பெற்று வரும் ஏழாவது மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமினை முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள ராஜ்கோ மகாலில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களிடம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.
தமிழ்நாடு முழுவதும் ஏழாவது வாரம் தொடர் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் நடைப்பெறும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாமில் 1 இலட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்காக கொண்டு 1162 தடுப்பூசி முகாம்கள் அமைத்து நடைப்பெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை நடைப்பெற்ற 6 சிறப்பு முகாம்களில் கோவிட் தடுப்பூசிகள் மொத்தம் 15, 50, 893 நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழகமக்கள் அனைவரையும் கோவிட் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழகத்தை கொரோனா இல்லாத மாநிலமாக உருவாக்கிடவும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று முதலமைச்சர் உத்திரவிட்டு மாநிலம் முழுவதும் இலவச கோவிட் தடுப்பூசி முகாம்கள் கடந்த வாரத்தில் ஒருநாள் வீதம் ஏழு வார தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி செப்- மாதத்தில் 12,19,26, தேதிகளிலும், அக் மாதத்தில்– 3,10, மற்றும் 23 ஆகிய தேதிகளிலும் நடந்த ஆறு சிறப்பு தடுப்பூசி முகாம்களில் இதுவரை மொத்தம் 5 கோடியே 73 இலட்சத்து 91 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று ஏழாவது முறையாக மாபெரும் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைப்பெற்று வருகிறது. இச்சிறப்பு முகாம் முதல் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் இரண்டாம் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் முக்கியத்துவம் அளித்து நடைப்பெறுகிறது.
தமிழக முதலமைச்சர் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற் கொண்டதன் விளைவாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர். ராமசந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், எஸ். தங்கபாண்டியன், விருதுநகர் மாவட்ட ஆட்த்தலைவர் ஜெ. மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.