கும்பகோணம், டிச. 10 –
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீநாகநாதசுவாமி திருக்கோயிலில் இன்று முற்பகல் பஞ்சமூர்த்திகள் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருள, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கரையில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர்.
கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி திருக்கோயில், நவக்கிரகங்களில் இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படுகிறது. இத்தலத்திற்கு வருகை தந்து, திருமால், பிரம்மா, இந்திரன், சந்திரன், சூரியன் ஆகிய தேவர்களும், கௌதமர், மார்கண்டேயர், பராசரர் ஆகிய முனிவர்களும், நளன், பகீரதன், சம்புமாலி, சந்திரவர்மா ஆகிய மன்னர்களும் வழிபட்டனர் என இத்தல வரலாறு கூறுகிறது.
மேலும் இத்தலத்தில், குன்று முலைக்குமரிக்கு ( ஸ்ரீகிரிகுஜாம்பிகை ) இருபுறமும் திருமகள், கலைமகள், வீற்றிருந்து பணி செய்ய, ஸ்ரீ சக்கரபீடத்தில் மத்தியில் நின்று கடும் தவம் புரிந்து இறைவனின் வாமபாகத்தை பெற்று தனிக்கோயில் கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இத்தலத்தில் ஸ்ரீராகுபகவான் திருமண கோலத்தில் நாகவல்லி, நாககன்னி என்ற இரு மனைவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார் இவருக்கு பால் அபிஷேகம் செய்வித்தால் ராகுதோஷம் நீங்கும் எனவும் பக்தர்கள் நம்பிக்கைக் கொண்டு வழிப்பட்டு வருகின்றனர். மேலும் இத்தலத்தில், ஸ்ரீராகுபகவான் மஹா சிவராத்திரி நன்னாளில் 2ம் காலத்தில் நாகநாதசுவாமியை வழிப்பட்டு சுசீல முனிவரால் ஏற்பட்ட சாபம் நீங்கப்பெற்றார் எனவும் இத்தல வரலாறு கூறுகிறது.
இத்தகைய பெருமை மற்றும் சிறப்புமிகு தலத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா கொடியேற்றத்துடன் 11 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டும் இவ்விழா கடந்த 01ம் தேதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் கிளி, சிம்ம, பூத, யானை, குதிரை, அன்னம் ஐந்து தலை நாகம், கைலாச வாகனம், உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலாமும் முக்கிய நிகழ்ச்சியான 7ம் நாள் 7ம் தேதி திருக்கல்யாணமும், ஒன்பதாம் நாளான நேற்று திருதேரோட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் 10 ஆம் நாளான இன்று விநயாகப்பெருமான் வெள்ளி மூக்ஷிக வாகனத்திலும், நாகநாதசுவாமி, கிரிகுஜாம்பிகை, சண்டிகேஸ்வரர் ஆகியோர் தனித்தனி வெள்ளி ரிஷப வாகனங்களிலும், வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் என பஞ்சமூர்த்திகளும் நாதஸ்வர மேளதாளம் முழங்க, கோயில் சூர்யபுஷ்கரணி கரையில் எழுந்தருள, அஸ்திரதேவருக்கு, திரவியப்பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலிய பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்ற பின்னர் அஸ்திரதேவருடன் சிவாச்சாரியார் திருக்குளத்தில் இறங்கி, மும்முறை முழங்கி எழ, கார்த்திகை கடைஞாயிறு தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.
அப்போது அந்நிகழ்வினைக் காண வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்த கோடிகள் கரைகளில் எழுந்தருளிய சுவாமிகளை தரிசனம் செய்து உளம் மகிழ்ந்தனர். தொடர்ந்து நாளை விளையாட்டியுடன் இவ்வாண்டுக்கான கார்த்திகையை கடை ஞாயிறு திருவிழா நிறைவு பெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் உமாதேவி, கோவில் பணியாளர்கள் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.




















