விருதுநகர் டிச. 29 –
நேற்று, விருதுநகர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து முன்னேற விழையும் விருதுநகர் மாவட்ட மத்திய அரசின் பொறுப்பு அலுவலரும் மத்திய பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் செயலாளருமான திருமதி ஜெயா விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி முன்னிலையில் நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விருதுநகர் மதுரை சாலையில் உள்ள வேளாண்மை ஒழுங்கு முறைக்கூட கிடங்கில் இ.நாம் திட்டத்தில் பதிவு செய்தல் மற்றும் பருத்தி, மிளகாய், உளுந்து, மல்லி,மக்காச்சோளம் ஆகியவற்றை தரமறிதல் செயல்முறை விளக்கத்தினை பார்வையிட்டு ஆய்வு செயதார்.
ஓவியாஸ் பள்ளி மற்றும் சாய்ராம் மேம்பாட்டுத்திறன் பயிற்சிப்பள்ளியில் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிக்கப்படுவதையும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் பெரிய வள்ளிக்குளத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் குடிநீர் இணைப்பு வழங்கிய பணிகளையும், பாலவநத்தத்தில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ. 35 ஆயிரம் மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகள் கழிப்பறை கட்டப்பட்டுள்ளதையும், மகாத்மா தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.14.35 லட்சம் மதிப்பீட்டில் முல்லை ஊரணி முதல் மாலை ஊரணி வரை 16 கி.மீ.தூரம் அமைக்கப்பட்டு வரும் வரத்துக் கால்வாய் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், அருப்புக் கோட்டை ஊராட்சி ஒன்றியம், குல்லூர் சந்தையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ. 5.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள குல்லூர் சந்தை சமுதாய சுகாதார வளாகம் பணிகளையும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் இருக்கன்குடியில் மியாவாக்கி முறையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரு.19.47 லட்சம் மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் பசுமை மரம் நடுதல் பணிகளை விருதுநகர் முன்னேற விழையும் மாவட்டத்திற்கான மத்திய அரசின் பொறுப்பு அலுவலர் மற்றும் மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறையின் கூடுதல் செயலாளர் ஜெயா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் ( மா.ஊ.வ.மு ) திலகவதி, செயற்பொறியாளர் சக்தி முருகன், உதவி செயற்பொறியாளர் சிவகாமி, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.














