கும்பகோணம், டிச. 14 –
108 வைணவ தலங்களில் 12வது தலமான திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியினை முன்னிட்டு இன்று, சர்வ அலங்காரத்தில், பெருமாள் மங்கல வாத்தியங்கள் முழங்க, பரமபத வாசல் வழியே பவனி வர, சொர்க்கவாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தும், பரமபத வாசலை கடந்து வந்தும் மகிழ்ந்தனர்.பல ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்ரீரங்கத்தை போலவே, இத்தலத்திலும் இவ்வாண்டு, கார்த்திகை மாதத்தில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கதாகும்.
கும்பகோணம் அருகேயுள்ள திருச்சேறை சாரநாயகி தாயார் சமேத சாரநாதப்பெருமாள் திருக்கோயில் 108 வைணவ தலங்களில் 12வது தலமாகும் இத்தலத்தில் சாரநாதப்பெருமாள், ஸ்ரீPதேவி, பூமிதேவி, நீலாதாட்சி, மார்பில் மகாலட்சுமி மற்றும் சாரநாயகி என பஞ்சலட்சுமிகளுடன் அருள்பாலிக்கிறார், காவிரி நதி மூவாயிரம் தேவ வருடங்கள் தவம் செய்து திரேதா யுகத்தில் தை மாத பூச நட்சத்திர தினத்தன்று முதலில் மடிமேல் குழந்தையாகவும் பின்னர் வைகுண்டத்தில் இருப்பது போல பஞ்சலட்சுமிகளுடன் காட்சியளித்து தென்னகத்தில் கங்கை நதிக்கு ஈடான நிலையை அடையவும், இத்தலத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன கிடைக்கும் பிராப்தமும், இத்தலத்தை தரிசப்பவர்கள் அனைவருக்கும் வைகுண்ட பிராப்தி கிடைக்கவும் வரம் பெற்றதாக வரலாறு எனவே 108 வைணவ தலங்களில் இங்கு மட்டுமே தைபூசத்திருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்
இத்தகைய சிறப்புமிக்க வைணவத்தலத்தில், பல ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்ரீரங்கத்தை போலவே, கார்த்திகை மாத ஏகாதசியான இன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்பட்டது, இதனையொட்டி, பெருமாளின் பத்து அவதாரங்களை விளக்கம் உற்சவ மூர்த்திகள் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு சேவை சாதித்தனர். தொடர்ந்து சாரநாதப்பெருமாள் சர்வ அலங்காரத்தில், அழகிய பட்டாடை மற்றும் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, மங்கல வாத்தியங்கள் முழங்க, பட்டாச்சாரியார் பாசுரங்கள் பாட, பரமபத வாசலை கடந்து பவனி வந்தார் அவருடன் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் பரமபத வாசலை கடந்து வந்தும், பிரகார உலா வந்த பெருமாளை தரிசனம் செய்தும் மகிழ்ந்தனர்.தொடர்ந்து கோயில் கொடிமரம் அருகே பெருமாள் எழுந்தருளி, ஆழ்வார்களுக்கு காட்சியளித்தார்.