கும்பகோணம், அக். 29 –
கும்பகோணத்தில் தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களை உள்ள நிலையில், தொடர் மழையால் நடைப்பாதை வியாபாரிகள் வியாபாரமின்றி வேதனையில் உள்ளனர். வரும் நவம்பர் மாதம் 4 ஆம் தீபாவளி வர இருக்கும் நிலையில் வெளி மாவட்ட தரைக்கடை தற்காலிக கடை வியாபாரிகள் தொடர் மழையினால் வியாபாரமே நடை பெறவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
கும்பகோணத்தை மையமாக கொண்டு அரியலுார், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, கடலுார், மன்னார்குடி, திருவாரூர், நன்னிலம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் தினந்தோறும் பொருட்களை வாங்குவதற்கு வந்து சென்றாலும், தீபாவளி வரும் நாட்களில் குடும்பத்துடன் வந்து பித்தளை பொருட்கள், துணிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு கும்பகோணம் வந்து விடுவார்கள். அவர்கள் காலை நேரத்தில் வந்து விட்டு மாலை வரை கொள்முதல் செய்து விட்டு அதன் பிறகு குடும்பத்துடன் வீட்டிற்கு செல்வார்கள். இதனால் தீபாவளி காலங்களில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை விட கும்பகோணத்தில் கூடுதலாக வர்த்தகம் நடைபெறும்.
இந்நிலையில் ஓவ்வொரு தீபாவளி வரும் நாட்களில் வெளி மாவட்ட சில்லறை வியாபாரிகள் தோடு, ஜிமிக்கி, உள்ளாடைகள், விலை குறைந்த சேலைகள், வேட்டி, புடவைகள், சட்டைகள், பெல்ட், பட்டாசுகள், பெண்களுக்கான அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவைகளை விற்பனை செய்வதற்காக பொற்றாமரை குளம், மகாமக குளம், ஆயிகுளம் ரோடு, காந்தி பூங்கா, மடத்துத்தெரு, நாகேஸ்வரர் வடக்கு வீதி, கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதி, சோமேஸ்வரர் கோயில் தெற்கு வீதி, உச்சிபிள்ளையார் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தரைக் கடைகள் தற்காலிக கடைகள் அமைத்து உள்ளனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் கடன் வாங்கி பொருட்களை வாங்கி வந்த தரைக்கடை தற்காலிக கடைகள் வியாபாரிகள் தொடர்ந்து தீபாவளி வரை மழை பெய்யுமே என்ற அச்சத்தில் உள்ளனர்.
மேலும் தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய தாங்களும் இந்த தீபாவளி இருள் சூழ்ந்ததாக அமைந்து விட்டதாக வேதனை தெரிவித்தனர்.