திருவள்ளூர், மே. 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் தனியார் நிதி நிறுவன ஊழியர் முகத்தில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர்கள் சிலர் அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படுகாயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அடுத்த தண்ணீர்குளம் தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் குமார் (27) . மேலும் அவர் திருவள்ளூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வசூல் செய்யும் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் லோன் தவணைக்கான பணத்தினைத் தருவதாக்க் கூறி அவரை திருவள்ளூர் ஐ.சி.எம்.ஆர் பின்புறம் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவழைத்துள்ளனர்.
அங்கு தன்னந்தனியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அஜித் குமாரை, 3 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர் முகத்தில் மிளகாய் பொடி தூவியும் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளது. அதைத் தொடர்ந்து தன் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக வெட்டு காயங்களுடன் இரு சக்கர வாகனத்தை இயக்கி வந்த அஜித் குமார், சிறிது தூரத்தில் இரு சக்கர வாகனத்தை இயக்க முடியாமல் கீழே விழுந்துள்ளார்.
மேலும் அதனைத் தொடர்ந்து அவர், தன்னை காப்பாற்றக் கோரி கூச்சலிட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சிலர் அவர் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அஜித் குமாருக்கு தலை, முதுகு உடல் உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் வெட்டு காயங்கள் கண்டறியப்பட்டு அவருக்கு சுமார் 50 தையல்கள் போடப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் அச்சம்பவம் எதற்காக நடைப்பெற்றது எனவும், வெட்டிய நபர்கள் யார், வாங்கிய லோனுக்கான தவணை கட்ட கோரி தொந்தரவு கொடுத்ததால் அவரை வரவழைத்து தாக்கினார்களா? அல்லது வேறு ஏதாவது தனிப்பட்டக் காரணத்தால் அவர் தாக்கப்பட்டாரா என்ற பல்வேறு கோணத்தில் திருவள்ளூர் தாலுகா போலீசார் மருத்துவ மனையில் சிகிச்சையில் உள்ள அஜித்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் அவர் எதற்காக தாக்கப்பட்டார் அவர்கள் யார் என்பது குறித்து தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூரில் பட்டப் பகலில் தனியார் நிதி நிறுவன ஊழியரை செல்போனில் பேசி வரவழைத்து அவர் முகத்தில் மிளகாய் பொடி தூவி அரிவாளால் வெட்டிய மர்ம கும்பல் தப்பியுள்ள சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.























