சென்னை, அக். 30 –
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோரப் பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி நகரக்கூடும் இதன் காரணமாக தென்காசி, திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை மற்றும் கனமழை ஓரிரு இடங்களில் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனைப் போன்று மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், போன்ற டெல்டா மாவட்டங்களிலும் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும் ஏனைய மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். வெப்பநிலையை பொறுத்தவரை அதிக பட்சமாக 30 மற்றும் குறைந்தப் பட்சம் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி மற்றும் பலத்த காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதல் மீனவர்கள் அப்பகுதிகளில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் மழை அதிக அளவு நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் 12 செ.மீ அளவும் குறைந்தப்பட்ச அளவு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளம், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில், சுருள்கோடு, கலியல், போன்ற இடங்களிலும் மேலும் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி திருவாரூர் மாவட்டத்தில் பாண்டவையார் தலைமை ஆகிய இடங்களில் தலா 3 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது. காரைக்காலில் 10 செ.மீ திருவாரூர் 8 செ.மீ வேதாரண்யம் 7 செ.மீ தக்கலை 6 செ.மீ நன்னிலம் 5 செ.மீ நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி, தென்காசி மாவட்டம் ஆய்க்குடி, தேனி மாவட்டம் கூடலூர், திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தலா 4 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.