சென்னை:

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கல்லூரிகளுக்கு சென்று அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்த்தி வருகிறார். வேளச்சேரி குருநானக் கல்லூரி கலை விழாவில் நேற்று கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:-

கேள்வி:- மய்யம் என்ற வார்த்தை எப்படி உங்களிடம் உருவானது?

பதில்:- இது நான் கண்டு பிடித்த ஒன்று அல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் தோன்றியது. அது என்னுள் வராமல் இருந்து இருந்தால் தான் ஆச்சர்யம். புயலில்கூட அமைதியான இடம் அதன் மையம் தான்.

கேள்வி:- வேலையில்லா திண்டாட்டம், கல்வித் தரம் குறித்து நீங்கள் முதல்வரானால் என்ன தீர்வு செய்வீர்கள்?

பதில்:- இது பல முறை என்னை நானே கேட்டுக்கொண்ட கேள்வி. வேலையில்லா திண்டாட்டத்துக்கு அரசும் கல்வியும் தான் காரணம். உங்கள் முன் இதை பேசுவதற்கு பதற்றம் இல்லை. உலகத்தின் தேவை 9 லட்சம் பொறியாளர்கள். அவற்றை இந்தியாவிலேயே தயார் செய்துவிட்டால் எப்படி வேலை கிடைக்கும்? ஒரே பாடத்திட்டத்தை எல்லோரும் படிக்கும் நிலையை மாற்றி அவரவர்களுக்கு பிடித்த துறையை படித்து அந்த துறைக்கு சென்றால் இந்த நிலை மாறும். பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தால் இல்லாமை இல்லாத நிலையாகி விடும்.

அரசியல்வாதிகள் பையை நிரப்புவதை நிறுத்திவிட்டு சிறிது நேரம் மன நிறைவுடன் பணியாற்றினால் வேலையில்லா திண்டாட்டம் ஒழிந்து விடும். தமிழ் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் என எதுவுமே சரியாக வரவில்லை என்ற கணிப்பு இருக்கிறது. கல்வித்தரம் உயர வேண்டும். சம்பாதிப்பதற்காக கற்க தொடங்குவதால் கற்பிப்பவர் நோக்கமும் அதுவாகவே இருக்கிறது.

கேள்வி:- டிராபிக் ராமசாமியையே தோற்கடித்த மக்கள் கொண்ட நாடு இது. உங்கள் வேட்பாளர் தேர்வு எப்படி இருக்கும்?

பதில்:- பாலசந்தர் இந்த கேள்வியை கேட்டு இருந்தால் நான் இந்த இடத்துக்கே வந்து இருக்க முடியாது. திறமை என்னிடம் இருப்பதை அவர் நம்பியதால் தான் சிவாஜியும் எம்.ஜிஆரும் கோலோச்சிய சினிமாவில் என்னை அறிமுகப்படுத்தினார். அதே போல் திறமை இருக்கும் இடம் எனக்கு தெரிகிறது. திறமையானவர்களை தகுதியானவர்களை பதவிகளில் அமர வைக்காததன் விளைவுதான் இப்போது பார்க்கிறோம். மக்கள் யாரையும் எப்படியும் தோற்கடிப்பார்கள். அதற்கு பெரிய பெரிய தலைவர்களும் விதிவிலக்கு அல்ல. ஆனால் அப்படி தோற்றதற்கு சின்ன சின்ன தவறுகள் தான் காரணங்களாக இருக்கும். பெரிய பெரிய தவறு செய்து தோற்பவர்கள் திருடர்கள்.

கேள்வி:-இந்தியன் படத்துக்கு பின்னும் லஞ்சம், ஊழல் ஒழியவில்லையே?

பதில்:- ஊழலும் லஞ்சமும் புதிது அல்ல. ரோம் நாட்டில் கூட இருந்து இருக்கிறது. ஒன்றிரண்டு பேர் தவறு செய்யலாம். ஒட்டுமொத்த மக்களும் தவறு செய்யக் கூடாது. தமிழ்நாட்டில் காசு கொடுத்து ஓட்டு வாங்குபவர்கள் 234 பேர் தான். ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போட தொடங்கினால் அது அழிவுக்கு செல்கிறது. சில பிரச்சினைகளுக்காக கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வேண்டும் என்று சிலர் சொன்னபோது நான் அதை ஆதரிக்கவில்லை. கிரிக்கெட் போட்டிகளை தடை செய்வதை விட்டு ஜார்ஜ் கோட்டையில் உள்ள 234 பேர் விளையாடும் போட்டியை நிறுத்த வேண்டும். இதை சொன்னபோது புரிய வில்லை என்றார்கள்.

கேள்வி:- உங்கள் படங்களில் நீங்கள் எப்போதோ சொன்ன அரசியல் எப்படி இப்போதுகூட சாத்தியமாக இருக்கிறது?

பதில்:- அறிஞர் அண்ணா தனி தமிழகம் கேட்டு அது தோல்வியில் முடிந்தபோது அண்ணா ‘நான் கேட்டதற்கான தேவைகள் அப்படியே தான் இருக்கின்றன’ என்றார். அதுபோல தான் நான் முன்பே சொன்னதை இப்போதுவரை அரசியல்வாதிகள் செய்து காட்டி வருகிறார்கள். சோ பல ஆண்டுகள் தொடர்ந்து ஒரே நாடகத்தை போடும்போது அதற்கு காரணமான அரசியல்வாதிகளுக்கு தான் நன்றி சொன்னார். அதுபோல நானும் இந்த அரசியல்வாதிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

கேள்வி:- உங்களுக்கு ஆதரவாக நாங்களும் இறங்குகிறோம் என்றாலும் சாக்கடை சுத்தமாகி விடுமா?

பதில்:- பானையில் இருக்கும் நல்ல தண்ணீரை துளிகூட சாக்கடைக்குள் இறங்க விடக்கூடாது. என்னை போன்றோரை சாக்கடையில் இறக்கி சுத்தம் செய்யவைத்து அதன் பின்னர் பானைத் தண்ணீரை குடிக்க பயன்படுத்திக் கொள்ளலாம். இறங்கினால் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். ஆனால் அதற்கு பயந்துகொண்டு நின்றுகொண்டே இருக்க முடியாது. எல்லையில் அபிநந்தன் காட்டுவது மட்டுமே வீரம் அல்ல. ஒவ்வொரு இந்தியனும் காட்டவேண்டியது இந்த வீரத்தை தான். நாம் எல்லோரும் இறங்கினால் சாக்கடை நிச்சயம் சுத்தமாகி விடும். உங்களிடம் நான் வணக்கத்தை எதிர் பார்க்க வில்லை. இணக்கத்தை எதிர்பார்க்கிறேன். நம்முடைய தவறுகள் தான் சாக்கடையாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதை சுத்தம் செய்வது நம் கடமை.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here