திருவண்ணாமலை டிச.14-
திருவண்ணாமலை அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தில் ஏரி புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் அடங்கியுள்ளது அண்டம்பள்ளம் கிராமம். இங்குள்ள ஏரி பகுதியில் 50 வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் நீர்வள ஆதார அமைப்பிற்கு உரிய ஏரியின் ஒரு பகுதியில் உள்ள இந்த வீடுகளை 21 நாட்களில் அகற்றுமாறு பொதுப்பணித்துறை சார்பில் கடந்த மாதம் 13ந் தேதி குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருபவர்கள் என்பதால் வேறு இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதனால் தங்களுக்கு மாற்று இடம் வழங்கக் கேட்டு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்ட பா.ம.க செயலாளர் பெ.பக்தவச்சலம் தலைமையில் வந்தனர். மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்று படித்து பார்த்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக அவர்களுக்கு மாற்று இடம் வழங்க திருவண்ணாமலை கோட்டாட்சியர் வீ.வெற்றிவேலுக்கு உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை அடுத்த தண்டராம்பட்டு வட்டம் வேப்பூர் செக்கடியைச் சேர்ந்த காளியம்மாள் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் அந்த கிராமத்தில் தான் உள்பட 7 பேருக்கு சம்மந்தப்பட்ட பஞ்சமி நிலத்தினை சின்னராஜ், மீனா ஆகியோர் கோகுல்நாதன் என்பவருக்கு தவறாக கிரயம் கொடுத்ததை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார். இதேபோல் திருவண்ணாமலை மாவட்ட தமிழர் பாரம்பரிய வீர விளையாட்டு மஞ்சு விரட்டு முன்னேற்றம் மற்றும் ரசிகர் பாதுகாப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் கே.குமார், செயலாளர் பாலா, பொருளாளர் பழனி ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் அளித்த மனுவில் பொங்கல் விழாவையட்டி மஞ்சு விரட்டு காளை விடும் திருவிழாவிற்கு அனுமதி அளிக்கும்படியும், இந்த விழாக்களை நடத்தும் கிராமங்களின் பெயர்களை அரசாணையில் பதிவிடவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.