ராமநாதபுரம், ஜூன்
இளைஞர்கள் தங்களுக்கு ஆர்வம் நிறைந்த துறையில் பணியினை தேர்வு செய்து அதில் முழு
ஈடுபாட்டுடன் திறனை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்திட வேண்டும். திறமையுள்ள நபராக
உயரும்பொழுது அதற்கேற்றவாறு ஊதியமும் உயரும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் பேசினார்.

ராமநாதபுரம் இன்பேன்ட் ஜீஸஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகம் மூலம் நடத்தப்பட்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் தகவல் தொழில்நுட்பவியல்
துறை அமைச்சர் டாக்டர் எம்.மணிகண்டன் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை
வழங்கினார்.
மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் விழாவிற்கு தலைமை வகித்தார்.
இவ்விழாவில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பேசியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா , வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும்
வகையில் பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திட உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட வேலைவாய்ப்பு
அலுவலகம் மூலமாக அவ்வப்போது பல்வேறு தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு
முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. படித்த இளைஞர்களுக்கு தொழில்திறன்
பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
ராமநாதபுரம் நகரில் எனது முயற்சியின் மூலம் 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில்
மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு 3000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று
பயனடைந்துள்ளனர். இந்த வேலைவாய்ப்பு முகாமில் உற்பத்தித் துறை, சேவை
துறை, மருத்துவம் மற்றும் செவிலியர் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த 63 நிறுவனங்கள் பங்கேற்று, 8-ம்
வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த இளைஞர்களை தங்களது நிறுவனங்களுக்கு தேர்வு செய்கின்றனர்.
இத்தகைய வாய்ப்புகளை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். படித்து
முடித்தவுடன் நிறுவனங்களில் பணிக்கு சேரும்பொழுது தொடக்கத்தில் வருமானம் குறைவாக இருக்கலாம்.
இருப்பினும் இளைஞர்கள் தங்களுக்கு ஆர்வம் நிறைந்த துறையில் பணியினை தேர்வு செய்து அதில் முழு
ஈடுபாட்டுடன் திறனை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்திட வேண்டும். திறமையுள்ள நபராக
உயரும்பொழுது அதற்கேற்றவாறு ஊதியமும் உயரும் என தகவல் தொழில்நுட்பவியல் துறை
அமைச்சர் அவர்கள் பேசினார்.
விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது:
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் அவ்வப்போது படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்
பயன்பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
முகாமினை நல்ல முறையில் நடத்திடும் வகையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும்
சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முகாமிற்கு வருகை தரும் நபர்களுக்கு அடிப்படைத் தேவையான
குடிநீர் வசதி, பெயர் பதிவு செய்வதற்கு தனி இட வசதி, அவசர கால சூழ்நிலையை எதிர்கொள்வதற்கான
ஆம்புலன்ஸ் போன்ற வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்
ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 500 நபர்கள் வேலைவாய்ப்பிற்காக பதிவு செய்துள்ளனர். கடந்த 2017-18 நிதியாண்டில்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித் தொகையாக ரூ.1.56 கோடி மதிப்பில் பயனாளிகளுக்கு நிதியுதவி
வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இவ்விழாவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மு.கருணாகரன், செய்தி மக்கள்
தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ந.ம.சீனிவாசன், இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் ரேமண்ட் , தாளாளர் அந்தோணி சகாயராஜ் உட்பட
அரசு அலுவலர்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here