கும்மிடிப்பூண்டி, ஜன. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பால கணபதி …
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட எஸ்.ஆர்.கண்டிகை ஊராட்சி கோபால்ரெட்டி கண்டிகை பகுதியில் வசித்து வரும் முரளிகிருஷ்ணா மற்றும் மீனா தம்பதியரின் மகள் 9 வயதுடைய எம். பூஜ்யாஸ்ரீ ஆவார்.
அவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். மேலும் அவர் புது கும்மிடிப்பூண்டியில் உள்ள வினா ஸ்ரீ யோகா மையத்தில் யோகா ஆசிரியர்கள் எஸ்.காளத்தீஸ்வரன், ஜெ.அர்ச்சனா, எஸ்.வித்யா ஆகியோரிடம் கடந்த 4 வருட காலமாக யோகா பயிற்சி பெற்று வருகிறார்.இந்நிலையில் பூஜ்யாஸ்ரீ யோகாவில் உலக சாதனை செய்யும் நிகழ்வு சித்தராஜா கண்டிகை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அவ்வுலக சாதனை நிகழ்வை, கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் துவக்கி வைக்க, ஊராட்சி மன்ற தலைவர் சி.எம்.ஆர். ரேணுகா முரளி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன், திமுக நிர்வாகி பிரபாகர், அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுஜாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அந்நிகழ்வில் மாணவி பூஜ்யாஸ்ரீ தனது இரண்டு கால்களையும் பின்புறமாக வளைத்து கால்களின் இரண்டு முட்டி பகுதியையும் முன்புறமாக இணைக்க கூடிய மிகவும் கடினமான திவி பாத சிராசாசன யோகாவை 2 நிமிடத்தில் 200 முறை செய்து உலக சாதனை படைத்துள்ளார்.. அவரின் அவ் உலக சாதனை நோவா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
தொடர்ந்து உலக சாதனை படைத்த பூஜ்யாஸ்ரீ க்கு நோவா உலக சாதனை பதிவாளர் சாதனை சான்றிதழை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ. கோவிந்தராஜன் முன்னிலையில் வழங்கினார். யோகாவில் உலக சாதனை படைத்த அரசு பள்ளி மாணவி பூஜ்யாஸ்ரீ, அவரது யோகா ஆசிரியர்கள் எஸ்.காளத்தீஸ்வரன், ஜெ. அர்ச்சனா, எஸ்.வித்யா ஆகியோரை எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட அப்பகுதி மக்கள் என அனைவரும் வெகுவாக பாராட்டினர்.





















