திருவண்ணாமலை, டிச. 4 –
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவின் பிரசித்திபெற்ற மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என பக்தி முழக்கம் விண்ணை பிளக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இத்தேரோட்டத்தை முன்னிட்டு 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கி விமர்சையாக நடந்து வருகிறது.
மேலும், தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்தீபத்திருவிழா உற்சவத்தில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரரும், இரவில் பஞ்சமூர்த்திகளும் பல்வேறு வாகனங்களில் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றர்.
அதன்படி 6 ஆம் நாளான வெள்ளி இரவு அன்று வெள்ளி தேரோட்டம் நடந்தது. திருக்கல்யாண மண்டபத்தில் அலங்காரம், தீபாரதனை முடிந்ததும், திட்டி வாசல் வழியாக ராஜகோபுரம் எதிரில் இரவு 10 மணியளவில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். பின்னர், வெள்ளி விமானத்தில் விநாயகரும், வெள்ளி விமானத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும், வெள்ளித்தேரில் உண்ணாமுலையம்மன் சமேத அண் ணாமலையாரும், இந்திர விமானத்தில் பராசக்தி அம்மனும், வெள்ளி விமானத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் பவனி வந்தனர்.
அதைத்தொடர்ந்து விழாவின் 7 ஆம் நாளான நேற்று காலை மகா தேரோட்டம் எனப்படும் பஞ்சரதங்கள் பவனி தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்தனர். இதை முன்னிட்டு தேரடி வீதியில் நிலையில் நிறுத்தியுள்ள பஞ்ச ரதங்களுக்கும் சலசங்கள் பொருத்தும் பணி நடந்தது. மேலும் பஞ்ச ரதங்களும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு. அதன் உறுதித் தன்மையும் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுள்ளது.
முற்றிலுமாக சீரமைக்கப்பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டமும் நடந்து முடிந்தது. மேலும், தேரோடும் மாடவீதியில் சாலை சீரமைப்பு, ஆக்கிமிப்புகள் அகற்றம், மின்வயர்கள் குறுக்கீடு அகற்றம் போன்ற பணிகள் நிறைவேற்றப்பட்டு, தேரோட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடைதிறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், பன்னீர் உள்பட பல்வேறு பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதை தொடர்ந்து பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளிதெய்வானை சமேத சுப்பிரமணியர், அண்ணாமலையார் பிரியாவிடை, உண்ணாமுலையம்மன், சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர்.
இதையடுத்து மகாதேரோட்டம் தொடங்கியது. முதல் தேராக விநாயகர் தேர் மாடவீதியில் பவனி வந்தது. இதையட்டி விநாயகர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து விநாயகர், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 6.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாடவீதியை சுற்றிவந்த விநாயகர் தேர் நிலையை அடைந்ததும், 2வதாக காலை 10.35 மணிக்கு சுப்பிரமணியர் தேரோட்டம் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து, மாலை 4 மணி அளவில் அண்ணாமலையார் பிரியா விடை அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் ‘மகா ரதம்’ புறப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையம்மனுக்கு அரோகரா’ என விண்ணதிர முழக்கமிட்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். மகா ரதம் நிலையை அடைந்ததும், பராசக்தி அம்மன் தேர் புறப்பாடு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் தேரை ஆயிரக்கணக்கான பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச்சென்றனர்.
தேரோட்டத்தின் நிறைவாக, சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைபெற்றது. இரவு நேரத்தில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அரசின் தடை இருந்ததால் பஞ்ச ரதங்களின் பவனியை இரவு 9.30 மணியளவில் நிலையை அடைந்தது. தேரோட்டம் காரணமாக நகருக்குள் கனரக வாகனங்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு மாற்றாக புறவழி சாலையில் களரக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டது.
அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தேரோட்டத்தையட்டி பாதுகாப்புக்காக 2 தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழுவினருடன் கூடிய 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவை மகா ரதத்தை பின்தொடர்ந்து சென்றது.
தேர் சக்கரங்களுக்கு கட்டைப் போடும் சேவை பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஒரே மாதிரியான சீருடை (டி-சர்ட்) வழங்கப்பட்டிருந்தன. அதோடு, அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் காப்பீடும் செய்யப்பட்டிருந்தது. தேர் சக்கரங்களை சுற்றிலும் 20 மீட்டர் இடைவெளி வரை பக்தர்கள் யாரும் செல்லாதபடி, போலீஸ் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டிருந்தது.
மேலும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் தேரேட்டத்தின்போது, கூட்ட நெரிசலில் திருட்டு, செயின் பறிப்பு போன்றவற்றை கண்காணிக்க 162 இடங்களில் சிசிடிவி கேமராக்கள், 22 இடங்களில் அதிநவீன சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.





















