மும்பை:
மராட்டிய மாநிலம் துலேவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் ஒற்றுமை நிலவுகிறது. ஆனால் பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக தாக்கி பேசுகிறார். இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது.
இந்த சூழ்நிலையிலும் கூட அவரால் 5 நிமிடங்கள் கூட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாமல் இருக்க முடியாது. அதுதான் அவருக்கும், எங்களுக்கும் உள்ள வேறுபாடு
பாராட்டுதலுக்குரிய தருணங்களில் கூட காங்கிரஸ் கட்சியின் மீது தாக்குதல் நடத்த மோடி தவறுவதில்லை. டெல்லியில் நடந்த போர் நினைவு சின்னம் திறப்பு விழாவின் போது கூட எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தார்.
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது என அனைத்து கட்சியினரிடமும் நான் கேட்டுக் கொண்டேன். ஏனெனில் இது நமக்கு முக்கியமானது. இப்பிரச்சினையில் நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். ஆனால் பா.ஜனதா கட்சியினர் வெறுப்பையும், வன்முறையையும் பரப்புகின்றனர்.
வங்கிகளில் கடன்பெற்று மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சியை மோடி ‘சகோதரர் மெடுல்’ என அழைக்கிறார். ஆனால் மக்களாகிய உங்களை நண்பர்களே என்கிறார். விவசாயிகளை ஒருதலைப்பட்சமாக நடத்துகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.