பேராவூரணி, மே. 21 –

தம்பட்டம் செய்திகளுக்காக சாரு…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகேவுள்ள ஆதனூரில் இந்து முஸ்லாம், கிருத்துவர் என அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து அவ்வூர் திருத்தேர் திருவிழாவினை வெகுச்சிறப்பாக கொண்டாடினார்கள்.

ஆதனூர் – கருப்பமனை –  கூப்புளிக்காடு கிராமத்தில் அருள்மிகு வீமநாயகி அம்மன் திருக்கோயில் வைகாசிப் பெருந்திருவிழா 9 ஆம் நாள் தேரோட்டத் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இத்தேரோட்டத்தை இப்பகுதி இந்து சமுதாய மக்களும், மதம் மாறி இப்பகுதியில் வசித்து வரும் கிறிஸ்தவ மக்களும் தங்கள் பழமை மாறாமல் ஒருங்கிணைந்து கொண்டாடி வருகின்றனர்.

பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார், திருக்கோவில் செயல் அலுவலர் ரவிச்சந்திரன், பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், கோயிலுக்கு பாத்தியப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த இரு சமுதாய பெரியோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு வீமநாயகி அம்மனை வணங்கி வழிபட்டனர். ஏற்பாடுகளை கிராமத்தினர், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தல வரலாறு

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம், தேவிப்பட்டினம் பெரும்செல்வந்தரின் தெய்வப்பிறவி மகளாக கள்ளிச்சி என்கிற வீமநாயகியை அதே உறவுமுறையைச் சேர்ந்த வீரப்பத்திரன் என்பவன் கவர்ந்து வந்து இந்த வனாந்தரத்தில் உள்ள கிராம காவல் தெய்வமான அய்யனார் கோயிலில் அடைக்கலம் புகுந்த நேரத்தில், வீமநாயகியின் சகோதரர்கள் ஆறுபேரும் தேடி அலைந்து இந்த காட்டுப்பகுதியில் இருப்பதை கண்டதும், “கண்டேன் கள்ளனையும் கள்ளச்சியையும்” என்று சொல்லிக்கொண்டே அதிக ஆத்திரமும் அதிவீர பராக்கிரமும் கொண்ட கடைசி சகோதரரான தூண்டி கருப்பன் என்பவன் தன் தங்கையை கவர்ந்து வந்த வீரபத்திரனை தனது வாளால் வெட்டியபோது, அவனை காப்பாற்றும் நோக்கில் வீமநாயகி தடுக்க முற்பட்ட நேரத்தில் வீமநாயகியும் வெட்டுண்டு மாய்ந்து போகிறாள்.

தங்கையின் இழப்பை தாங்கி கொள்ள முடியாத சகோதரர்கள், தங்கை இல்லாமல் தந்தையை காண விரும்பாமல் தங்களை தாங்களே வெட்டிக்கொண்டு அனைவரும் மடிந்து போகிறார்கள்.தான் பெற்ற மகளை காணவில்லை என்று தேவிபட்டிணத்திலிருந்து தாய், தந்தை மற்றும் தனது சுற்றத்தார்களுடன் தேடி அலைந்து இவ்விடத்தை கண்டபோது வனாந்திரத்தின் மேல்பகுதியில் கழுகுகளும், பருந்துகளும் வட்டமிட அவர்களும் கிராம மக்களும் பதற்றத்துடன் அந்த இடத்தை சென்று அடைந்து போது தெய்வீக சக்தி கொண்டவளான ஒரே மகளும், ஆறு மகன்களும் வெட்டுண்டு கிடந்த வேதனையை தாங்கி கொள்ள முடியாமல் துடித்துக்கொண்டிருந்த நேரத்தில் கூடியிருந்த கிராம மக்கள் கூறிய ஆறுதலும், காட்டிய அன்பும் அவர்களை நெகிழ வைத்துவிட்டது.

என் தெய்வ குழந்தைகளே, எங்களை விட்டு சென்ற பிறகு அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களோ. செல்வங்களோ எங்களுக்கு எதற்கு என்று கூறிய பெற்றோர்கள், இவைகளை நீங்களே வைத்துக்கொண்டு என் பிள்ளைகள் தஞ்சம் அடைந்த அய்யனார் கோயிலுக்கு அருகிலேயே இவர்களையும் தெய்வமாக வைத்து வழிபடும்படி வேண்டிக்கொள்ள அதனை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் அய்யனார் கோயிலுக்கு அருகிலேயே அவர்களுக்கு கோயில் அமைத்து அனைத்து சமூகத்தினரும் வழிபட தொடங்கினார்கள். அன்று முதல் கிராம மக்கள் அனைவரும் நோய் நொடிகளின்றி மிகுந்த செல்வ செழிப்புடன் வாழ்ந்து வருகிறார்கள். இது மட்டுமல்லாது இன்றளவும் வீமநாயகியம்மனை தனது வேண்டுதல் நிறைவேற துதித்து வழிபடுபவர்களுக்கு நினைத்த காரியம் வெற்றி பெறுவது தின்னம் என்பது இப்பகுதி மக்கள் நம்பிக்கை.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here