ராமநாதபுரம், செப். 20-
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மையுடன் சீரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, என, மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் செய்தியாளர்கள் சுற்றுப்பயணத்தில் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் வெண்ணத்தூர் மற்றும் சம்பை ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர்கள் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்மாய் புனரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் செய்தியாளர்களுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நேரடி ஆய்வு செய்தார். குடிமராமத்து திட்டத்தின் கீழ் வெண்ணத்தூர் கண்மாயில் ரூ.99 லட்சம் மதிப்பிலும் சம்பை கண்மாயில் ரூ.39 லட்சம் மதிப்பிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து நிலத்தடி நீர்மட்டத்தினை மேம்படுத்திடும் நோக்கில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.37.59 கோடி மதிப்பில் 69 கண்மாய்களில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கீழ்வைகை வடிநில கோட்டம், பரமக்குடியின் கட்டுப்பாட்டின் கீழுள்ள 41 கண்மாய்களிலும் குண்டாறு வடிநில கோட்டம் மதுரையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 28 கண்மாய்களிலும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பணிகளை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட கண்மாய்களின் ஆயக்கட்டுதார்களை ஒருங்கிணைத்து வெளிப்படையாக விவசாய பாசனதாரர் சங்கம் நிர்வாக குழு ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் 90 சதவீதம் அரசின் பங்களிப்பு தொகையுடனும், 10 சதவீதம் சம்பந்தப்பட்ட ஆயக்கட்டுதாரர் நல சங்கத்தின் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்படுகின்றன.
அதன்படி மேற்குறிப்பிட்ட 69 கண்மாய்களில் 211.47 கி.மீ. நீள அளவிற்கு கரைகள் பலப்படுத்துதல், 127.90 கி.மீ. நீள அளவிற்கு வரத்துக்கால்வாய் புனரமைத்தல், 6.3 கி.மீ. நீள அளவிற்கு உபரி நீர் வடிகால் புனரமைத்தல், 112 மடைகள் மராமத்து செய்தல், 133 மடைகள் மீளக்கட்டுதல், 41 கலுங்குகள் மராமத்து செய்தல், 10 கலுங்குகள் மீளக்கட்டுதல், சீமக்கருவேல மரங்களை அகற்றுதல், கண்மாயினை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இப்புனரமைப்பு பணிகளானது கடந்த ஜூலை 2019ல் துவங்கப்பட்டு இம்மாத இறுதிக்குள் முழுமையாக நிறைவேற்றிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்ளும் விவசாய நலச்சங்க பிரதிநிதிகளுக்கு குடிமராமத்து திட்டப் பணிகள் குறித்து உரிய பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் குடிமராமத்து மேற்கொள்ளும் அனைத்து கண்மாய்களிலும் வருவாய்த்துறை அலுவலர்கள் நில அளவீடு செய்து கண்மாயின் எல்லையினை குறியீடு செய்திடவும், ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை அலுவலர்களோடு ஒருங்கிணைந்து பாரபட்சமின்றி அகற்றிடவும் சீமைக்கருவேல மரங்களை அகற்றிடவும் உத்தரவிட்பட்டுள்ளது.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். இந்த சுற்றுப்பயண ஆய்வின்போது பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவராமகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் பிரபு, ஆனந்தபாபுஜி, வட்டார வளர்ச்சி அலுவலர் ராமமூர்த்தி, வட்டாட்சியர் தமிழ்செல்வி மற்றும் அரசு அலுவலர்கள், கிராம பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here