சென்னை ஜூலை 31-
சென்னை இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தமிழ்நாடு அமைப்புச்சாராத் தொழிலார்கள் நலவாரியத்தின் சார்பில் 50, அமைப்புச்சாராத் தொழிலாளர்களுக்கு ரூ.34 கோடியே 78 இலட்சத்து 88 ஆயிரத்து 950 மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
இத்திட்டம் உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் முன்னாள் முதலமைச்சர் காலஞ்சென்ற கலைஞர் அவர்களால் 17.3.1999 அன்று தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு நலவாரியமாக உருவாக்கப்பட்டு தொடர்ந்து 2006 முதல் 2011 வரையிலான ஆட்சிக்காலத்தில் 15 தனி நலவாரியங்களாக உருவாக்கப் பட்டன ,மேலும் அமைப்புச்சார் தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பதிவு மற்றும் புதுப்பித்தலின் போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 1.9.206 முதல் கலைஞரால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
அமைப்புச்சாராத் தொழிலாளர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பதிவுசெய்தல் புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள்ளை வழங்குவதற்கு ஏதுவாக 1.11.2008 முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்கள் தொடங்கப் பட்டதுடன், 15.9.2009 முதல் இணையதளம் வாயிலாக அமைப்புச்சார தொழிலாளர்கள் எளிய முறையில் பதிவு செய்யவும் புதுப்பிக்கவும் மற்றும் நலத்திட்ட உதவிக்ள பெறுவதற்கு ஏதுவாகவும் வழிவகை செய்யப்பட்டது.
இவ்விழாவில் 18 அமைப்புச்சாராத் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 50, ஆயிரம் தொழிலாளர்களுக்கு 10 கோடியே 69 இலட்சத்து 86 ஆயிரத்து 950 ரூபாய்க்கான திருமண நிதியுதவி மகப்பேறு நிதியுதவி, கல்வித்தொகை, கண்கண்ணாடி, ஒய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்தி ட்டங்களையும், ஓய்வூதிய நிலுவைத் தொகையாக ரூ. 24 கோடியே 9 இலட்சத்து 2 ஆயிரம் என மொத்தம் ரூ.34 கோடியே 78 இலட்சத்து 88 ஆயிரத்து 950 க்கான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.
இவ்விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வே.கணேசன், நாடாளு மன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத் தலைவர் பொன் குமார் , தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலாளர் கிர்லோஷ் குமார், தொழிலாளர் ஆணையர் முதன்மைச் செயலாளர் அதுல் ஆனந்த் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் , தொழிற் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துக் கொண்டனர்.




















