சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை விமர்சித்து வருவது குறித்து தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

நாட்டு நலனுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைத்து வருவது போல் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.

தீவிரவாத தாக்குதலால் ராணுவ வீரர்களின் இன்னுயிரை இழந்த சோகத்தில் நாடே தவித்து கொண்டிருக்கிறது. அதற்கான பின் நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி ஓய்வின்றி உழைத்து கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

ஆனால் இங்கோ மு.க.ஸ்டாலின் பாண்டிச்சேரி முதல்வரின் தர்ணாவை முடித்து வைப்பதில் தீவிர கவனமாக இருக்கிறார். அந்த தர்ணாவை முடித்து வைக்க மோடி அக்கறை காட்டவில்லை என்கிறார்.

உயிரிழந்த ராணுவ வீரரின் உடல் தூத்துக்குடி அருகே வந்த அதே நேரத்தில் அங்கிருந்து சில மைல் தூரத்தில் மு.க.ஸ்டாலின் கிராமசபை கூட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த வீரமகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தக்கூட வரவில்லை. என்னே தேசப்பற்று? உங்கள் ஜனநாயக கடமையை என்னவென்று விவரிப்பது.

கிராம பஞ்சாயத்து டூர் நடுவே கேள்வி கேட்கிறது அறிவாலயம். மோடி வெளிநாடுகள் டூர் சென்று வந்ததால்தானே உலக நாடுகளே நமக்காக குரல் கொடுக்கின்றன. கேலி பேசிய ஊழல் விஞ்ஞானிகளுக்கு இப்போதாவது புரிந்ததா?

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் எங்கள் கூட்டணி, நாங்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய அறிவிப்புகள் எல்லாம் விரைவில் வெளிவரும்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் என்றாலே போராட்டம் நடத்துவது ஒன்றையே கலாச்சாரமாக மாற்றி வருகிறார்கள்.

தமிழகம் அமைதியாகத்தான் இருக்கிறது. ஆனால் மு.க.ஸ்டாலின் பாண்டிச்சேரியில் தொடரும் போராட்டம் இங்கேயும் வரும் என்கிறார். அதாவது தமிழகத்தையும் போராட்ட களமாக்க பார்க்கிறார். மக்கள் இதை அனுமதிக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here