இராசிபுரம், ஜூன். 21 –
பணி நேரத்தில் ஒகேனக்கல் சுற்றுலா சென்றதற்காக ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுகாதாரத் துறையின் பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்ய வந்த அவர் ராசிபுரம் அருகே மலைக் கிராமமான கெடமலை மலைப்பகுதிக்கு பல கிலோ மீட்டர் தொலைவு நடந்தே சென்று இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பரிசோதனை செய்து மருந்து பெட்டகங்கள் வழங்கினார்.
அவ் ஆய்விற்கு இடையே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன்,
தமிழகத்தில் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தின் பாதை வசதியற்ற மலை கிராமமான கெடமலைப்பகுதியில் தற்போது 75 லட்சமாவது பயனாளியை பரிசோதித்து மருந்து பெட்டகம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவக் குழுவினர் மலைப் பகுதிக்குச் சென்று மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்வார்கள் என்றார்.
மேலும், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையின் மருத்துவர் சண்முகவடிவு, மருத்துவர் தினகரன் ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். சண்முகவடிவு பணி நேரத்தில் ஒகேனக்கல் சுற்றுலா சென்றதற்காகவும், டாக்டர் தினகரன் அரசு மருத்துவமனையில் தனக்கு பதிலாக தனது மகனை மருத்துவம் பார்க்க அனுமதித்தாலும் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் அமைச்சர் கூறினார்.
தொடர்ந்து, தமிழகத்தில் காலியாக உள்ள 1021 மருத்துவர்கள் உள்ளிட்ட நான்காயிரம் மருத்துவ காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அவர் தெரிவித்தார்.




















