இராசிபுரம், ஜூன். 23 –

ராசிபுரம் அடுத்துள்ள போதமலைக்கு சாலை அமைக்கும் இடத்திற்கு அளவீடு செய்யும் பணிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர்  மா.மதிவேந்தன் அடிக்கல் நாட்டினார்.

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்துார் ஒன்றியத்தில் போதமலை உள்ளது. இங்குள்ள மேலூர், கீழுர் மற்றும் கெடமலை பகுதியில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்தியா சுதந்திரம் அடைந்து, 75 ஆண்டு ஆகியும் இங்குள்ள மலைவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் சாலை வசதி ஏற்படுத்தவில்லை. மேலும், அங்கு வசிக்கும் மக்கள் தங்களின் தேவைக்காக கீழே உள்ள நகரங்களுக்கு 10 கி.மீ., தூரம் நடந்து வரவேண்டும்.

அதனால், நோயாளிகள் அவசர சிகிச்சை பெற முடியாமல் மிகவும் பாதிக்கப்பட்டு வந்தனர். ஒவ்வொரு தேர்தலின் போதும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான பொருட்கள் கழுதைகள் மூலம் கொண்டு செல்லும் நிலை நீடித்து வருகிறது.

போதமலைக்கு மலைப்பாதை அமைக்க வேண்டும் என்பது பல ஆண்டுகால கோரிக்கை. இந்நிலையில் உச்சநீதி மன்ற பசுமை தீர்ப்பாயம் போதமலையில் சாலை அமைக்க அனுமதி அளித்தது. இதற்காக தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதன் பயனாக பசுமை தீர்ப்பாயம் இதற்கான உத்தரவை கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது.

இதனை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்சயபா எம்.பி., ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங்கிடம் நேரில் வழங்கினர்.

கலெக்டர் பரிந்துரையின் பேரில், திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, உள்ளாட்சித்துறை மூலம், ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, போதமலைக்கு, 34 கி.மீ., துாரம் சாலை அமைக்கும் பணி விரைவில் துவக்கப்படுகிறது.

இந்த நிலையில், போதமலைக்கு சாலை அமைக்கும் பணிகளுக்காக இடத்தை அளவீடு செய்யும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா போதமலை அடிவாரம் மற்றும் கெடமலை அடிவாரப் பகுதியில் இன்று நடந்தது.

இந்நிகழ்வில் பங்கேற்ற இராசிபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.,வும், சுற்றுலாத்துறை அமைச்சருமான டாக்டர் மா.மதிவேந்தன் கலந்துக்கொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.ராமசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.,ஏ.ஆர்.துரைசாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி, புதுப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் ஜெயக்குமார், பட்டணம் பேரூராட்சி துணை தலைவர் நல்லதம்பி, கீழூர் ஊராட்சி மன்ற தலைவர்  திருமதி அலமேலு மணி, வனச்சரக அலுவலர் இரா.ரவிச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மாதவன் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here