கும்பகோணம், நவ. 2 –
கும்பகோணத்தில் இன்று கல்லறை திருநாளை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்து போன தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
கும்பகோணத்தில் மேம்பாலம் அருகில் உள்ள கல்லறை மற்றும் தூய அலங்கார அன்னை பேராலயம் கல்லறையில் நூற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு இன்று கல்லறை திருநாளை முன்னிட்டு மலரஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நவம்பர் 2-ந் தேதியை சகல ஆன்மாக்கள் நினைவு நாளாக கடைப்பிடிக்கிறார்கள். வழக்கம் போல இந்த ஆண்டும் இன்று நவம்பர் 2-ந் தேதி நினைவு நாளாக கடைப் பிடிக்கப்படுகிறது. இன்று தூய இருதய ஆலய மக்களால் கத்தோலிக்க கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தில் இருக்கும் புல் மற்றும் செடி, கொடிகள் வெட்டி அகற்றப்பட்டு, சுண்ணாம்பு தெளித்து சீரமைக்கப்பட்டது. பின்னர் தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளில் மலர்களால் அலங்காரம் செய்து மெழுகுவர்த்தி ஏற்றி, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.
கல்லறை தோட்டங்களுக்கு காலை முதல் மாலை வரை கிறிஸ்தவர்கள் திரளாக சென்று அஞ்சலி செலுத்துவதால், அந்த நாள் கல்லறை திருநாள் என்று அழைக்கப்படுகிறது. இன்று மாலையில் பங்கு தந்தையர்கள் கல்லறை தோட்டங்களுக்கு சென்று புனித நீரால் மந்திரிப்பார்கள். மேலும் காலை மற்றும் மாலையில் ஆலயங்களில் அனைத்து ஆன்மாக்களின் இளைப்பாறுதலுக்காக சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.
இது கொரோனா தொற்று காலமாக இருப்பதால் கல்லறை தோட்டங்களுக்கு செல்லும் மக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறும் பங்கு தந்தைகள் சார்பில் அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதே போல் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்களும் தங்களது முன்னோரின் நினைவாக கல்லறைகளில் அஞ்சலி செலுத்துகிறார்கள்.