கும்மிடிப்பூண்டி, ஜன. 18 –
கும்மிடிப்பூண்டி அருகே உள்ள ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் இன்று நடைப்பெற்ற படப்பிடிப்பில் பணியாற்றிக்கொண்டிருந்த லைட்மேன் 40அடி உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்படப்பிடிப்பு குழுவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஐயர்கண்டிகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டி அமைந்துள்ளது.
இப்பிலிம் சிட்டியில், பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்பு மட்டுமல்லாது திரைப்படங்களுக்கு பின்ணனி இசையமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று நடிகர் சத்யராஜ் நடித்துக் கொண்டுயிருக்கும் வெப்பன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு அப்பிலிம் சிட்டியில் நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் அதற்கான லைட் செட்டிங்க் அமைக்கும் பணியினை மேற்கொள்வதற்காக ஏ.ஆர்.ஆர். பிலிம் சிட்டியில் இன்று காலை சென்னை சாலிக்கிராமத்தை சேர்ந்த 47 வயது நிரம்பிய குமார் என்ற லைட்மேன் சுமார் 40அடி உயரத்தில் மின்விளக்குகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக குமார் கால் தவறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த குமாரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே லைட்மேன் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து லைட்மேன் குமாரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படபடிப்பிற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்த லைட்மேன் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் படக்குழுவினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

























