சென்னை:

நாடு முழுவதும் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்தது. இந்த திட்டத்தை நடப்பு நிதியாண்டிலேயே தொடங்க திட்டமிட்டு, அதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது.

இந்த நிதி 3 தவணைகளாக வழங்க முடிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில், இதற்காக 1 கோடி விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அடுத்த ஓரிரு தினங்களில் மேலும் 1 கோடி பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

தற்போது தேர்வு செய்யப்பட்டு உள்ள விவசாயிகளுக்கு முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு இந்த திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கான விழா கலைவாணர் அரங்கத்தில் நடந்தது. இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திட்டத்தில் பயனடையும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலைவாணர் அரங்கத்தில் திரண்டு இருந்தனர். அவர்களுக்கு தலா ரூ.2000-க்கான உதவித்தொகையை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அப்போது முதலமைச்சர் பழனிசாமி பேசியதாவது:

தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ளன. கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பல்வேறு பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகிறோம். வேளாண் பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படும் என்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here