திருவாரூர், மார்ச் . 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
தமிழகத்தில் கலப்பட உணவால் நுகர்வோர் நலன் பாதிப்பு ஏற்படுகிறது. அதனை தடுத்திடும் வகையில் உணவு பொருட்கள் அனைத்திற்கும் அக்மார்க் தரசான்றுகளை உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு துறை வழங்கிட வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் கலப்பட உணவால் நுகர்வோர் நலன் பாதிப்பு அடைந்து வருவதாகவும், அதனை தடுத்திட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், உலக நுகர்வோர் தினவிழா மற்றும் மகளிர் தின விழா தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் மற்றும் திருவாரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மூலம் திருவாரூரில் நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் தலைவர் அழகிரிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு நுகர்வோர் பாகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ் பேசுகையில்,
இன்றைக்கு நாடு முழுவதும் கலப்பட உணவு என்பது அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது எனவும், குறிப்பாக தமிழகத்தில் கலப்பட உணவால் நுகர்வோர் நலன் பாதிக்கப்பட்டு வருவதாக அப்போது அவர் தெரிவித்தார். மேலும் தமிழக அரசு நுகர்வோர் நலனை பாதுகாத்திடும் வகையில் உணவு பொருட்கள் அனைத்திற்கும் அக்மார்க் தரச்சான்று வழங்கிட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள நுகர்வோர் குறைதீர் ஆணையங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கிட அரசு வழிவகை காண வேண்டும் எனவும், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி நுகர்வோர் குறைதீர் ஆணையங்களில் நடைபெறும் வழக்குகள் அனைத்தும் வருடகணக்கில் தேங்கி கிடப்பதாகவும், அதனால் நுகர்வோர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், 90 நாட்களில் நுகர்வோர் சம்மந்தமான வழக்குகளுக்கு தீர்வு காண மத்திய மற்றும் மாநில அரசுகள் வழிவகை காண வேண்டும் என்றார்.
மத்திய அரசு இரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கான வழங்கி வந்த பயண சலுகை கட்டணத்தை நிறுத்தியது கண்டிக்கத்தக்கது எனவும், அதனை உடனடியாக நடைமுறைப் படுத்திட வேண்டும் என அப்போது மத்திய அரசைக் கேட்டுக்கொண்டார்.
மேலும் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு, பாரம்பரிய சிறுதானிய வகைகளை தமிழக அரசு கொள்முதல் செய்து அதனை நியாயவிலைக்கடைகள் மூலமாக குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துவதாக அப்போது அவர் தெரிவித்தார்.




















