மீஞ்சூர், ஜூன். 22 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வட சென்னை அனல் மின் நிலையத்தில் 5 அலகுகளில் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த அனல் மின் நிலையத்தில் 1000 – க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிப் புரிந்து வருகி்ன்றனர்.
இந்நிலையில் அம் மின் நிலையத்தில் பணிப்புரியும் அவ் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று வடசென்னை அனல் மின் நிலைய நுழைவு வாயல் முன்பாக நின்று, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன மற்றும் கோரிக்கை முழக்க ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டத் தலைவர் பாண்டியன் தலைமையில் நடைப்பெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில், திட்ட பொருளாளர் சலீல்குமார் முன்னிலை வகித்தார். மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் ரவிச்சந்திரன் கலந்துகொண்டு சிறப்பு விளக்கவுரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் தெரிவிக்கும் போது, தமிழ்நாட்டில் உள்ள அரசு நிறுவனங்களில் 10ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வதாக அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் எனவும், மேலும் அனல் மின்நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மேலும் காலியாக உள்ள அறுபதாயிரம் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், மின் வாரிய ஆணை 2ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள். முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் அத்தியாவசிய சேவைகளை வழங்கி வரும் மின்வாரிய தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து மக்களுக்கு தடையின்றி மின்சாரம் கிடைக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க முன்னோடித் தலைவர்கள் அடுத்தகட்டமாக ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி வரும் 24 ஆம் தேதி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இவ்வார்ப்பாட்டத்தில், ரவி, மாரிமுத்து, பிரதாப் ,முனுசாமி ,குமார், பாண்டி, ஆனந்த் உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். நிறைவாக திட்ட துணை தலைவர் சுந்தரம் நன்றி தெரிவித்தார்.






















