தஞ்சாவூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
காலம் காலமாக காதல் எனும் பொருளை தாண்டி வராத மனிதர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லைதான் காதலுக்காக ஆதி முதல் நவநாகரீக காலம் வரை காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களது காதலை வெளிப்படுத்த புறாவிடு தூது முதல் இடைக்காலத்தில் கடிதங்கள் வாயிலாக வெளிப்படுத்திய காதலையும் தாண்டி தற்போது பூட்டுவரை வளர்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர் இன்றைய டு கிட்ஸ் காதலர்கள் அதுக்குறித்து அவர்கள் தெரிவிக்கும் போது, தொங்குகிற பூட்டுகள், ஒட்டப்பட்டுள்ள துண்டு சீட்டுகள் இவற்றை பார்த்ததும் திருமணம் வேண்டியோ பிள்ளைவரம் வேண்டியோ விநாயகரை சுற்றி வந்து அரசமரத்தடியிலும், அம்மனை வேண்டி வேப்ப மரத்திலும் பக்தர்கள் கட்டிய வேண்டுதல் சீட்டுகள் இல்லை ….
காதலர்கள் காதலை பதிவு செய்து பூட்டிய பூட்டும், துண்டு சீட்டு தான் அவைகள் என்கின்றனர். மேலும் நாளை காதலர் தினத்தை முன்னிட்டு தஞ்சையில் காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் பரிசளித்து கொள்ள விதவிதமான பொருட்களை ஆர்வமுடன் ரசித்து தேர்ந்தெடுத்து வாங்கி செல்கின்றனர்.
பிப்ரவரி 14 காதலர் தினம். இந்த நாள் எப்போது வரும் என எதிர்பார்த்து காத்திராத காதலர்களே இருக்க முடியாது. காதலர் தினத்தன்று காதலன் காதலிக்கும், காதலி காதலனுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கி தங்கள் அன்பை பரிமாறி கொள்வார்கள்.
காதலர்களுக்காவே வித்தியாசமான பரிசு பொருட்கள் தஞ்சை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ளன. டெடிபேர் பொம்மைகள், இதய வடிவிலான சிறிய வெல்வெட் தலையணைகள், பியூட்டி ஸ்மைல் என எழுதப்பட்ட வண்ண ஜெல்லி மிட்டாய்கள், டெய்ரி மில்க் இதயம், உதடு போன்ற வடிவங்களில் சாக்லெட்டுகள், சுற்றி வந்து ஒட்டி கொள்ளும் இதய காந்தங்கள், முகம் பார்க்கும் கண்ணாடிகள், வண்ண ஒளி யோடு இசையுடன் பொம்மைகள், உள்ளங்கையில் வைத்து விரல்களால் தொட்டால் பிரஸர் போல் ஏறும் டாய்ஸ், குடிநீர் பாட்டில்கள் என பல வடிவங்களில் புதிய வரவாக வந்துள்ள பொருட்களை காதலர்கள் ஆர்வமுடன் தேர்ந்தெடுத்து ரசித்து வாங்கி செல்கின்றனர்.
சில காதலர்கள் இன்றைக்கே காதலர் தினத்தை கொண்டாட தொடங்கி விட்டனர். காதலர்களுக்காக மட்டுமே உள்ள காஃபி ஷாப் ஒன்றில் பூட்டில் காதலர்கள் தங்கள் பெயர்களை எழுதி பூட்டி விட்டு ஆளுக்கொரு சாவியை எடுத்து சென்றனர்.
சிலர் காதலிக்க ஆரம்பித்த வருடம் நாள் மாதம் ஆகியவற்றுடன் தங்கள் பெயரையும் துண்டு சீட்டில் எழுதி ஒட்டி செல்கின்றனர். மீண்டும் இதே நாளில் இருவரும் இணைந்து வந்து பூட்டை திறப்பார்களாம். கடிதத்தில் எழுதி காதல் வளர்ந்த காலம் மாறி பூட்டுக்கு வந்து விட்டது.


















