திருவண்ணாமலை ஆக.29-
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சங்க நிர்வாகிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் ஆட்சியர் பா.முருகேஷிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளில் கடந்த 2016ம் அண்டு ஜூலை மாதம் முதல் தூய்மைக் காவலர்கள் சிறப்பான முறையில் பணி செய்து வருகிறார்கள். கொரோனா தொற்று காலத்திலும் சிறப்பான முறையில் பணி செய்து வருகின்றனர். ஆனால் புதியதாக வந்துள்ள ஒரு சில ஊராட்சி மன்ற தலைவர்கள் ஏற்கனவே பணியில் இருக்கின்ற பணியாளர்களை எடுத்து விட்டு புதிய பணியாளர்களை தேர்வு செய்ய உளளதாக தெரிவித்து வருகிறார்கள். எனவே ஏற்கனவே பணி புரிந்த பணியாளர்கள் தொடர்ந்து பணி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 860 ஊராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களிடம் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மாதாமாதம் எங்கள் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்துள்ளனர். ஆனால் 70 சதவித பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்படாமல் உள்ளது. அதை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு சீருடை வழங்க வேண்டுமென்று பலமுறை மனுக்கள் கொடுத்தும் இது வரையில் வழங்கப் படவில்லை. அதை உடனே வழங்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப் படவில்லை. ஒரே மாவட்டத்தில் பலவிதமான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதை முறைப்படுத்தி ஒரே விதமான ஊதியம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.