திருவண்ணாமலை, அக்.26-

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் காஞ்சி ஊராட்சியில் ரூ.21.00 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 35-வது புதிய கிளையினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (25.10.2021) தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது, வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து 01.10.1994 முதல் தனியே பிரிக்கப்பபட்டு, தற்போது 34 கிளைகளுடன் திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருகிறது. மேலும், இவ்வங்கி பொதுமக்களிடம் ரூ.1140 கோடி அளவிற்கு வைப்புத்தொகை திரட்டியும், ரூ.1663 கோடி அளவிற்கு கடன் வழங்கியும், தொடர்ந்து இலாபம் ஈட்டியும், சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.

 கடந்த 2020-2021-ம் ஆண்டில் 10.26 கோடி இலாபம் ஈட்டியுள்ளது. இவ்வங்கி மாதம் ஒன்றுக்கு ரூ.454.63 கோடி அளவிற்கான லேவாதேவியுடனும், வருடம் ஒன்றுக்கு ரூ.5455.61 கோடி அளவிற்கான லேவாதேவியுடனும் செயல்பட்டு வருகிறது. கடன் வைப்பு விகிதம் 146.54 சதவிகிதமாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியானது பொதுமக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பயிர்க்கடனும், சங்கங்கள் மற்றும் கிளைகள் மூலம் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த மத்திய காலக்கடன், பண்ணை சாராக் கடன், நகைக்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், வீட்டு வசதிக்கடன், வீடு அடமானக்கடன், சிறு குறு தொழில்களுக்கான கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், மாற்றுத் திறனாளிகள் கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், சிறுவணிகக்கடன், சம்பளக்கடன், தான்ய ஈட்டுக்கடன், டாம்போ, டாப்செட்கோ மற்றும் தாட்கோ திட்டக் கடன்களையும் குறைந்த வட்டியில் வழங்கி பொதுமக்களுக்கு சேவை செய்து வருகிறது.

இவ்வங்கயில் வணிக வங்கிகளை போல் ஆர்டிஜிஎஸ் சேவை, ஏடிஎம் வசதி, மொபைல் பேங்கிங் வசதி, குறுஞ்செய்தி வசதி வசதி உள்ளது. இவ்வங்கியில் மற்ற வங்கிகளை காட்டிலும் வைப்புகளுக்கு அதிக வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகள் வரையிலான வைப்புகளுக்கு அதிகபட்சமாக 7 சதவிகித வட்டியும், 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவிகித கூடுதல் வட்டியும் வழங்கப்பட்டு வருகிறது.

 திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியைப் போல் மாநிலம் முழுவதும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் 908 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் ரூ.32,418.58 கோடி அளவிற்கு பொது மக்களிடமிருந்து வைப்புத்தொகை சேகரிக்கப் பட்டுள்ளது. இன்று நடைபெறும் கிளை திறப்பு விழா நிகழ்ச்சியில் புதிய கிளை சார்பாகவும், இணைப்புச் சங்கங்கள் சார்பாகவும் சிறுவணிக கடன், மகளிர் தொழில் முனைவோர் கடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடன் மற்றும் பயிர்கடன் திட்டங்களின் கீழ் 353 பயனாளிகளுக்கு ரூ.2.03 கோடி அளவிற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்களால் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் 28 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பினை பொதுப் பணித்துறை அமைச்சர் வழங்கினார். இந் நிகழ்வின் போது, மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி காமாட்சி, துணைத்தலைவர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிட் கே.சங்கர், மண்டல இணைப் பதிவாளர், கே.ராஜ்குமார், ஒன்றிய குழுத் தலைவர்கள்  சி.சுந்தரபாண்டியன் (புதுப்பாளையம்), அன்பரசி ராஜசேகரன் (கலசபாக்கம்) ஊராட்சிமன்ற தலைவர் (காஞ்சி) சரஸ்வதி கோபால், மற்றும் பலர் கலந்துகொண்டனர்.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here