திருவண்ணாமலை ஆக.29-
நஞ்சை நிலத்தை புஞ்சை நிலங்களாக வகை மாற்றம் செய்வது குறித்து திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சமுத்திரம் கிராமம் கிருஷ்ணா நகரில் நில உரிமையாளர்கள் எஸ்.பன்னீர்செல்வம் அரிகிருஷ்ணன் ஆகியோரது நிலம் வீட்டு மனைக்கு வகை மாற்றம் செய்து தடையில்லா சான்று வழங்க ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று நேரில் பார்வையிட்டு புல தணிக்கை செய்தார்.
அப்போது அவரிடம், சமுத்திரம் கிராமம் கிருஷ்ணா நகரில் வசிக்கும் பொதுமக்கள் மனு அளித்தனர். அதில், “திருவண்ணாமலை அடுத்த சமுத்திரம் கிராமத்தில் சொர்ணபூமி நகர், ரமணா கார்டன், கிருஷ்ணா நகர், யோகி ராம் கார்டன், சர்வேஷா கார்டன் ஆகிய பகுதிகளில் 300 குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதிகளில் தெரு விளக்கு வசதி இல்லை. பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகள் அதிகம் உள்ளதால், இரவு நேரங்களில் நடமாடுவதற்கு அச்சமாக உள்ளது. எனவே மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். மேலும் நகராட்சி பகுதிக்குட்பட்ட கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகிலிருந்து வனதுர்க்கை அம்மன் கோயில் வரை செல்லும் சாலை, குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், மழை காலங்களில் நடந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, புதிய சாலை அமைத்து கொடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டு ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றிணை அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கே.சி.அமிர்தராஜ்க்கு உத்தரவிட்டார். அப்போது கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, வட்டாட்சியர் எஸ்.சுரேஷ், மண்டல துணை தாசில்தார் சாந்தி, வட்ட துணை ஆய்வாளர் எஸ்.சையத் ஜலால், சார்ஆய்வாளர் ராஜ்குமார், வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராமநிர்வாக அலுவலர் அ.ஏழுமலை, நல்லவன்பாளையம் ஊராட்சி செயலாளர் ஆர்.முருகன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.