ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களால் நடத்தப்பட்ட உணவு திருவிழாவின் விற்பனை மூலம் கிடைத்த பணம் ரூ.51 ஆயிரத்தை மாணவர்கள் ராமநாதபுரம் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்திற்கு மாணவர்களால் வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் அருகே அழகன்குளம்-பனைக்குளம் நஜியா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் சேர்ந்து பள்ளி வளாகத்தில் உணவு திருவிழா நடத்தினர். இந்த உணவு திருவிழாவில் மாணவர்களே தயாரித்த இயற்கை முறையான உணவுகள், திண் பண்டங்கள் தயாரிக்கப்பட்டு ஸ்டால்களில் விற்கப்பட்டன.
இந்த விற்பனை மூலம் மாணவர்களுக்கு ரூ.51 ஆயிரம் வசூலானது. இந்த நிதியை நஜியா மெட்ரிக் பள்ளியில், பள்ளியின் நிறுவனர் ஹாஜி ஹலிபுல்லாகான் தலைமையில் பள்ளி தாளாளர் ஹாஜியானி பவசுல் ஹனிபா, பள்ளி துணைத் தலைவர் ஜனாப் முகம்மது ஷராபத்துல்லா ஆகியோர் முன்னிலையில் மாணவர்கள் இந்தியன் செஞ்சிலுவை சங்கத்திற்கு வழங்கினர்.
இந்த நிதி வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளி இயக்குனர் முகம்மது இபுராம்ஷா வரவேற்றார். இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் புரவலர் ராமநாதன், மாவட்ட செயலாளர் ராக்லண்ட் மதுரம், பொருளாளர் குணசேகரன் ஆகியோர் நிதிக்கான காசோலையை பெற்றனர். வட்டார வள ஆசிரியர் தேவி உலகநாதன், துரைபாண்டியன், முத்துக்குமார் ஆகியோர் மாணவர்களின் இந்த சேவையை பாராட்டி பேசினர். மாணவர்களை இயந்திரங்களாக உருவாக்கி கொண்டிருக்கும் காலத்தில் நஜியா மெட்ரிக் பள்ளி மாணவர்களின் ஈகை உள்ளமும் உயர்ந்த பண்பும் உருவாக்கிய பள்ளியின் சிறப்பை இந்தியன் செஞ்சிலுவை சங்க நிர்வாகிகள் பாராட்டி பேசினர். ஆசிரியர் நளினி தேவி நன்றி கூறினார்.