கும்பகோணம், ஏப். 15 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான  சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

அதன் சித்திரைப்பெருவிழா, இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து சுவாமியின் அருள் பெற்றனர்.

மேலும் அவ்விழாவினை முன்னிட்டு வரும் 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான, சித்திரை பெரிய தேரின் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

கும்பகோணம் சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் சுமார் இரண்டாயிரம்  ஆண்டுகள் பழமையும், தொன்மையும் வாய்ந்ததாகும். மேலும் அத்திருத்தலத்தில் திருமழிசையாழ்வாருக்கு பெருமாள் நேரில் காட்சி தந்துள்ளார் எனவும் மேலும் அவரது வேண்டுகோளின்படி உத்தானசாயி (சயனத்தில் இருந்து சற்று எழுந்திருக்கும் நிலை) கோலத்தில் சாரங்கபாணிசுவாமி எனும் ஆராவமுதன் இங்கு அருள் பாலிக்கிறார். என அத்தல வரலாறு கூறுகிறது.

மேலும் அத்தலத்தில் தாயார் கோமளவள்ளி பெரியாழ்வார், பேய்யாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், ஸ்ரீ ஆண்டாள் ஆகிய ஏழு ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்ய தேசங்களில் திருவரங்கம் திருப்பதிக்கு அடுத்து சிறப்பு வாய்ந்த வைணவ ஸ்தலமாக சாரங்கபாணித் திருக்கோயில் போற்றப்படுகிறது

அத்தகைய பெருமைபெற்ற சாரங்கபாணிசுவாமி திருக்கோயில் ஆண்டு தோறும் சித்திரைப்பெருவிழா பத்து நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம் அதுபோல இவ்வாண்டு இவ்விழா, இன்று காலை சாரங்கபாணிசுவாமி ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் தேசிகன் சன்னதிக்கு எழுந்தருள, நாதஸ்வர மேள, தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, கருடாழ்வார் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி, கொடி மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டு, கொடி மரத்திற்கும், சுவாமிகளுக்கும் நட்சத்திர தீப ஆர்த்தி செய்யப்பட்டது,

இன்று நடைபெற்ற கொடியேற்ற வைபவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது, முக்கிய நிகழ்ச்சியாக நான்காம் நாளான, 18 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு, ஓலைச்சப்பரத்தில் தங்ககருட சேவையும், ஒன்பதாம் நாளான 23 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் மிகப்பெரிய தேர்களில் ஒன்றான சித்திரை பெரியத்தேரின் தேரோட்டம் நடைபெறுகிறது,

இந்த தேரோட்டத்தில் அண்டை மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here