திருவாரூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி மன்றத்தலைவரின் உறவினர்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் பணியாற்றி வந்த பாதுகாவலரை தாக்கிய சம்பவத்தை கண்டித்து மருத்துவமனையின் சக பாதுகாவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அப்போராட்டத்தினால் சுகாதார தூய்மைப் பணிகள் பெருமளவு தேக்க நிலைக்கு சென்றதாக நோயளிகள் தெரிவித்தனர்.
திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் மூலமாக சுழற்சி முறையில் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் சொற்ப வருமானத்தில் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தண்டலை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட அத்தகு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தண்டலை ஊராட்சி மன்றத் தலைவரின் உறவினர்கள் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் நோயாளியை பார்க்க வந்துள்ளனர். அப்போது அங்கு பணியில் இருந்த பாதுகாவலர்கள் பார்வையாளர் நேரத்தில்தான் உள்ளே அனுமதிக்க முடியும் என கூறி அவர்களைத் தடுத்துள்ளனர்.
அதனால் ஆத்திரம் அடைந்த தண்டலை ஊராட்சி மன்றத்தலைவரின் உறவினர்கள் 3 பேர் பாதுகாவலர்கள் லெட்சுநாராயன், மாதேஷ் ஆகிய இருவரையும் தாக்கியுள்ளனர். அதில் படுகாயம் அடைந்த பாதுகாவலர்கள் இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அச்செயலை கண்டிக்கும் வகையிலும், பாதுகாவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாததைக் கண்டித்தும் வன்முறையில் ஈடுப்பட்ட அவர்கள் மீது குண்டர்கள் காவல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் அவர்களை கைது செய்ய வேண்டியும் மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்டவர்கள் பணிகளை புறக்கணித்து மருத்துவமனை வாயில் முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போராட்டத்தால் மருத்துவமனையில் வெகுவாக சுகாதார தூய்மைப் பணிகள் பாதிக்கப்பட்டதாக உட்புற நோயாளிகள் தெரிவித்தனர்.
மேலும் அச்சம்பவம் குறித்து தகவலறிந்து அங்கு வந்த காவல்துறையினர் போராட்டக் காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று மீண்டும் பணியில் ஈடுப்பட்டனர்.




















