திருவள்ளூர், டிச. 05 –
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டை அருகே சென்னை கல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், கவரப்பேட்டை காவல் நிலையம் அருகே கெமிக்கல் ஏற்றி செல்லும் டேங்கர் லாரியை சுப்பாராவ் என்பவர் ஓட்டி சென்ற போது பின்பக்க டயர் வெடித்ததில் நிலை தடுமாறி பின்பக்கமாக ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த ஶ்ரீதர், சதிஷ்குமார், ரோகித்சர்மா ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும், இவ்விபத்தில் லாரி தலைகீழாக கவிழ்ந்தது. அத்தகவல் அறிந்து அங்கு சென்ற கவரப்பேட்டை காவல் நிலைய போலீசார், பொன்னேரி சம்பத் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு உடல் கூறாய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இவ்விபத்தில் படுகாயம் அடைந்த சிலரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுமதித்தனர். விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து பேருந்து மற்றும் லாரி ஓட்டுனர்கள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கெமிக்கல் ஏற்றி செல்லும் லாரியில் இவ்விபத்தின் போது ரசாயனம் இல்லாததால் பெரிய அசம்பாவிதம் நடைப்பெறாமல் தவிர்க்கப்பட்டது. காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் பேருந்து மற்றும் லாரியை உடனடியாக சாலையோரம் அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீர்படுத்தினார்கள்.




















