தஞ்சாவூர்:
தஞ்சாவூர் ரெட்டிபாளையம் ரோடு கார்முகில் நகரை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 67). இவர் கடந்த 23-ந் தேதி தனது வீட்டை பூட்டி விட்டு அய்யன் திருவள்ளுவர் தெருவில் உள்ள உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
பின்னர் நேற்று மாலை அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை கொள்ளை போய் இருந்ததை கண்டு திடுக்கிட்டார். பூட்டி கிடந்த வீட்டை நோட்டமிட்டு மர்ம கும்பல் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்றுள்ளது தெரிய வந்தது. இதுபற்றி ஷாஜகான், தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும் கொள்ளை நடந்த வீட்டுக்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை பதிவு செய்தனர். தொடர்ந்து போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
தஞ்சை கூட்டுறவு காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 69). இவர் சென்னையில் போலீஸ் உதவி கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தற்போது அவர் சென்னையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இதனால் தஞ்சையில் உள்ள வீட்டை அவரது மகள் அபிராமி அவ்வப்போது வந்து பார்த்து விட்டு செல்வது வழக்கம். அபிராமி, திருச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தஞ்சை கூட்டுறவு காலனியில் உள்ள தந்தை வீட்டை அபிராமி பார்வையிட வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுபற்றி அவர் மருத்துவக் கல்லூரி போலீசில் புகார் செய்சார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தஞ்சை நகரில் 2 வீடுகளில் நகை- பணம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.