
சென்னை, ஏப். 27 –
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று அதிகாலை தேர் மின் கம்பியில் உரசியதால் ஏற்பட்ட விபத்து தொடர்பாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் உரை நிகழ்த்தினார்.
தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் இன்று (27-4-2022) அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாக, தேர், மின் கம்பியில் உரசியதால் விபத்து ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே 11 பேர் உயிரிழந்து விட்டனர் என்ற நெஞ்சை உலுக்கும் செய்தியினை இப்பேரவைக்கு மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம், மேலவெளி கிராமத்திற்கு உட்பட்ட களிமேடு அப்பர் திருக்கோயிலில் கடந்த 26-4-2022 அன்று நடைபெற்ற திருநாவுக்கரசு சுவாமிகள் 94 ஆம் ஆண்டு சித்திரை சதய விழாவின் தொடர்ச்சியாக நடைபெற்ற தேர் பவனி வீதி உலாவின்போது, இன்று அதிகாலை 3-10 மணி அளவில் தஞ்சாவூரிலிருந்து பூதலூர் செல்லும் சாலையில் தேரோட்டம் முடிந்து, தேரினைத் திருப்ப முற்பட்டபொழுது, தேர் கட்டுப்பாட்டினை இழந்து அருகில் இருந்த உயர் மின்னழுத்த மின் கம்பியில் உரசியதாகத் தெரிகிறது. எனத்தெரிவித்தார்.
அப்போது ஏற்பட்ட மின் விபத்தில் சம்பவ இடத்திலேயே மோகன், பிரபாத், ராகவன், அன்பழகன், நாகராஜ், சந்தோஷ், செல்வம், ராஜ்குமார், சாமிநாதன், கோவிந்தராஜ், பரணி ஆகிய 11 பேர் பரிதாபமாக உயிரிழந்த துயரமான சம்பவம் நிகழ்ந்ததை தெரிவித்தார்.
இந்த விபத்தில் காயமடைந்துள்ள 16 பேர்களும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாகவும்,. அவர்களுக்குத் தேவையான அனைத்து சிறப்பு சிகிச்சைகளையும் அளிப்பதற்கு நான் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், இப்பணிகளை மேற்பார்வையிடவும், துரிதப்படுத்திடவும், தஞ்சாவூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மற்றும் மக்கள் பிரதிநிதிகளும், அரசு உயர் அலுவலர்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் விபத்து நடைபெற்ற இடத்திற்கு இன்று அவரும் நேரில் சென்று, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவும், காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களைச் சந்திக்கவும் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்திடும் வகையில், பேரவையில் பின்வரும் இரங்கல் தீர்மானத்தினை நிறைவேற்றித் தருமாறு பேரவைத் தலைவரைக் கேட்டுக் கொண்டார்..
தீர்மானம்
மிகுந்த துயரமான இச்சம்பத்தில் உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு இப்பேரவை ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவிக்கும் தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்.


















