PIC FILE COPY
திருவண்ணாமலை, ஜூலை. 25 –
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி சுவாமி தரிசனம் செய்தார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கடந்த சனிக்கிழமையன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அவரது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். சுவாமி சன்னதி மற்றும் அம்மன் சன்னதியில் தரிசனம் செய்த தலைமை நீதிபதிக்கு கோவில் இணை ஆணையர் அசோக்குமார் கோவில் சார்பில் சுவாமி பிரசாதம் வழங்கினார்.
முன்னதாக திருக்கோயிலூரில் உள்ள உலகளந்த பெருமாள் கோவிலில் தரிசனம் முடித்துவிட்டு திருவண்ணாமலைக்கு வருகை தந்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு திருவண்ணாமலை மாவட்ட அமர்வு நீதிபதி ஜமுனா மற்றும் நீதித்துறையினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை தலைமை நீதிபதி பார்வையிட்டார். மேலும் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.





















