கும்பகோணம், அக். 25 –
கும்பகோணத்தில் கொரோனா முதல் அலை 2வது அலை பிறகு கடந்த மாதம் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் அரசினர் கலைக் கல்லூரியில் அரியலூர் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 4, 300 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
2 வாரம் முன்பு மாணவர்கள் கல்லூரி முதல்வரிடம் குடிதண்ணீர் வசதி கழிப்பறை வசதி செய்து தரக்கோரி கோரிக்கை மனுவை கொடுத்தனர். இது வரை அப்புகார் குறித்து நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், மேலும் இக்கல்லூரியில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வரும் நிலையில், தற்போது வரை ஒரு கழிப்பிடம் மட்டுமே உள்ளது. என்பதையும் சுட்டிக்காட்டி மாணவிகளுக்கு கூடுதல் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி செய்து தர கோரி பலமுறை கல்லூரி முதல்வரிடம் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். அதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு நிலவியது .
தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி மற்றும் காவல்துறையினர் மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கல்லூரி முதல்வரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததை தொடர்ந்து மாணவர்கள் தற்காலிகமாக வகுப்பு புறக்கணிப்பை ஒத்தி வைத்து வகுப்பறைக்கு சென்றனர் .
தொடர்ந்து மாணவர்கள் தெரிவித்த போது , தொடர்ந்து அடிப்படை வசதிகள் செய்து தர நிர்வாகம் அலட்சியப் போக்கை மேற் கொண்டால் , மீண்டும் வகுப்பு புறக்கணிப்பு செய்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.