கும்பகோணம், அக். 25 –
தமிழகத்தில் வகுப்பு வாரியாக பாடத்திட்டங்கள் 30 முதல் 55 சதவீதம் வரை குறைக்கப் பட்டுள்ளது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இன்று கும்பகோணம் அருகே திப்பிராஜபுரத்தில் நடைப்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தமிழகத்தில் வகுப்பு வாரியாக 30 முதல் 55 சதவீதம் வரை பாடத்திட்டங்கள் குறைக்கப் பட்டுள்ளதென்றும், போட்டித்தேர்வுகளில் மாணவர்கள் வெற்றிப் பெறும் வகையில் கல்வித்தரம் உயர்த்தப் பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், செய்தியாளர்களின் மற்றொருக் கேள்விக்கு பதிலளிக்கையில் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர தமிழக முதல்வர் பெரும் முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், மத்திய கல்வி கொள்கையில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை அமல்படுத்துவதில் தமிழக அரசின் லட்சியமாக இருக்கும் என்றும், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து திப்பிராஜபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் விளையாட்டுத்திடல் அமைப்பதற்கு 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என மாநில சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் மெய்யநாதன் திப்பி ராஜபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்தார். மேலும் கிராமப்புற பகுதிகளில் உள்ள இளைஞர்கள் நலன் பெறும் வகையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விளையாட்டு திடல்கள் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மெய்யநாதன் மேலும் தெரிவித்தார்.