கும்பகோணம், அக். 22 –
தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியின் 168 வது ஆண்டு நிறுவன நாள் விழா மற்றும் 25 ஆண்டுகள் பணியாற்றிய போராசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் இணைந்து இன்று சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் எம்.எல்.ஏ. பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
தென்னகத்தின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் 168 ஆண்டுகள் பழமையான கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி கடந்த 1854 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி தொடங்கப் பெற்றது.
தற்போது 168வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளதை தொடர்ந்து இன்று இக்கல்லூரியில் நிறுவன நாள் விழா, 25 ஆண்டுகளாக இக்கல்லூரியில் பணியாற்றி வரும் பேராசிரிய பெருமக்களுக்கு
பாராட்டு விழாவும் இணைந்து கல்லூரி முதல்வர் துரையரசன் தலைமையில் கல்லூரி அண்ணா கலையரங்கில் நடைபெற்றது.
இதில் முன்னாள் மாணவரும், தமிழக அரசின் தலைமை கொறடா கோவி செழியன் எம்எல்ஏ (திருவிடைமருதூர்), முன்னாள் மாணவரும் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினருமான செ இராமலிங்கம், மற்றும் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து இக்கல்லூரியில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த பேராசிரிய பெருமக்களுக்கு பாராட்டு விழா, அவர்களுக்கு நினைவு பரிசுடன், நற்சான்றிதழையும், அரசு கொறடா கோவி செழியன் வழங்கி மகிழ்ந்தார், இந் நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரிய பெருமக்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவியர்களும் பங்கேற்றனர்.