மீஞ்சூர், ஏப். 26 –
இன்று மீஞ்சூரில் இருந்து வண்டலூர் செல்லும் வெளிவட்ட சாலையில் அரசு பேருந்துகளை இயக்க வலியுறுத்தி திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் மாநகரப் போக்குவரத்து மேலாண்மை இயக்குநரை சந்தித்து கோரிக்கை வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை செல்லும் வெளிவட்ட சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால் தற்போதுவரை அவ்வழியாக இதுவரையிலும் அரசு பேருந்துகள் பயன்பாட்டிற்கு நடைமுறை படுத்தப்படவில்லை.
இதனால் மீஞ்சூரில் இருந்து வெளி நகரங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் ரயில் மூலமாகவும் மற்றும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று பேருந்துகளை பிடித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மணிக்கணக்கில் மக்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
மேலும், மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை அமைக்கப்பட்டிருக்கும் நான்கு வழி சாலையில் பேருந்துகளை இயக்கினால் குறித்த நேரத்தில் நினைத்த இடத்திற்கு பொதுமக்கள் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக இருக்கும் எனத்தெரிவித்து மீஞ்சூர் அனைத்து வியாபாரிகள் பொது நல சங்கத்தினர் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமாருக்கு கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் ஆபிரகாமைச் சந்தித்து இச் சாலைகளில் மீஞ்சூரிலிருந்து செங்குன்றம். பட்டாபிராம் .ஆவடி. பூந்தமல்லி. வண்டலூர் .ஆகிய நகரங்களுக்கு பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளும் படி கோரிக்கை அடங்கிய மனுவினை அளித்தார்.
அவனைப் பெற்றுக் கொண்டவர் இதுக் குறித்து துறை உயர் அதிகாரிகளிடம் பரிசீலனை செய்து நடைமுறைப்படுத்துவதாக உறுதியளித்தார். இந்நிகழ்வில், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத்துறை தலைவர் முகமது தாரிக், எஸ்.சி.எஸ்.டி தொழிற்சங்கத் தலைவர் வில்சன், பர்மாபஜார் நாகூர்கனி, காஜா மைதீன், அன்சாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.




















