மைசூரு :

மைசூருவில் சுத்தூர் மடாதிபதி சிவராத்திரிகேந்திர சுவாமிகள் தலைமையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையாவும், முன்னாள் முதல்-மந்திரியும், கர்நாடக மாநில பா.ஜனதா தலைவரும், தற்போது சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடியூரப்பாவும் திடீரென கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் இருவரும் நேரில் சந்தித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். மேலும் சிறிது நேரம் சிரித்து பேசிக் கொண்டிருந்தனர்.

அரசியலில் இரு துருவங்களாக காணப்படும் சித்தராமையாவும், எடியூரப்பாவும் ஒரே மேடையில் சந்தித்து, சிரித்து பேசிக் கொண்டதால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நிகழ்ச்சி முடிந்ததும் இருவரும் சிரித்து பேசியபடி வந்து தங்களது கார்களில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். அதற்கு முன்னதாக முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இன்று(அதாவது நேற்று) நானும், எடியூரப்பாவும் ஒரே மேடையில் சந்தித்துக் கொண்டோம். அப்போது இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். ஆனால் நாங்கள் ஒரே மேடையில் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டதையே பெரிய செய்தி ஆக்கிவிடுகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு இதேபோல் நாங்கள் இருவரும் உப்பள்ளியில் நேரில் சந்தித்துக் கொண்டோம். அப்போது நாங்கள் இருவரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து பேசியதாக செய்தி வெளிவந்தது. இதனால் கர்நாடகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதேபோல் இப்போதும் நாங்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொண்டுள்ளோம். இதுவும் பெரிய செய்தியாகிவிடும் என்பது எனக்கு தெரியும். உப்பள்ளியில் நான் அவரை பார்த்தபோது, நீங்கள் நன்றாக இருக்கிறீர்களா? என்று கேட்டேன். பதிலுக்கு அவரும் என்னைப் பார்த்து நலமாக இருக்கிறீர்களா? என்று விசாரித்தார்.

அதேபோல்தான் இன்றும்(அதாவது நேற்று) நான் அவரிடம் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்டு நலம் விசாரித்தேன். பதிலுக்கு அவரும் சிரித்தபடி என்னைப் பற்றியும், என் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் கேட்டு நலம் விசாரித்தார். தேவராஜ் அர்ஸ் சொன்னபடி அரசியலில் யாரும் நிரந்தர நண்பர்களும் இல்லை, எதிரிகளும் இல்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here