கும்பகோணம், ஆக. 15 –
கும்பகோணம் மாநகர் காமராஜர் சாலையில் அமைந்துள்ள தூய அலங்கார அன்னை பேராலயம் நூற்றாண்டுகள் பழமையானதும், பெருமை வாய்ந்ததாகும். மேலும் இப் பேராலயத்தின் பெருவிழா ஆண்டு தோறும் 10 நாட்களுக்கு வெகுச் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாகும்.
அதுப்போன்றே இவ்வாண்டும் இச்சிறப்புமிகு பெருவிழா கடந்த 6- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதில் முதன்மை குரு அமிர்தசாமி கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்தார்.
அவ்விழாவினை முன்னிட்டு போராலய வளாகம் முழுவதும் அழகிய பல வண்ண நிறத்திலான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழா நாட்கள் அனைத்திலும் காலை மாலை விசேஷ திருப்பலியும், மறையுரையும் நடைபெற்றது.
மேலும் அப்பெரு விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி இன்று மறை மாவட்ட ஆயர் அந்தோணிசாமி தலைமையில் திருப்பலி நடைபெற்றது.
திருப்பலியை தொடர்ந்து இரவு 8 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட 5 தேரில் அலங்கார அன்னை, புனித அந்தோனியார், ஜெயராக்கினி, சம்மனசு, சூசையப்பர், ஆடம்பர தேரில் எழுந்தருள தேர்பவனி வாணவேடிக்கையுடன் சிறப்பாக நடைபெற்றது.
தேர் பவனியின் போது, ஒவ்வொரு கிறிஸ்துவ குடும்பத்தினர் உப்பு, மிளகு ஆகியவற்றை அலங்கரிக்கப்பட்ட தேரின் மீது தூவி மெழுகுவர்த்தி ஏற்றி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
இந்நிகழ்வில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தொடர்ந்து இன்று 15ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சுதந்திர தினத்தன்று காலை திருப்பலியும், தேசிய கொடி ஏற்றுதலுடன், சுதந்திர தின கொண்டாட்டங்களும், மாலை தேவ நற்கருணை ஆசிர் மற்றும் கொடியிறக்கத்துடன் இவ்வாண்டிற்காண ஆண்டு பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.




















