சென்னை, நவ. 2 –
கடந்த மாதம் அக். 4 முதல் 24 – 2021 வரை வணிகவரி நுண்ணறிவுப் பிரிவு அலுவலகங்கள் மூலம் தமிழகம் முழுவதும் நடத்திய வாகன தணிக்கையில் வழிப்பட்டியல் இல்லாத சரக்கு வாகனம் மூலம் வரி மற்றும் தண்டத் தொகையாக ரூ. 4. 75 கோடி அத்துறையின் மூலம் வசூலிக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களைதமிழ்நாடு அரசு செயல்படுத்துவதில் வணிகவரித்துறை மூலம் பெறப்படும்வரி வருவாயானது பெரும் பங்கு வகிக்கிறது.
இவ்வாறு அரசுக்கு சேர வேண்டிய வரி வருவாய் உரிய காலத்தில் பெறப்படுவதை உறுதி செய்யும் விதத்தில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வணிகவரித்துறையின் புலனாய்வு சார்ந்த நடவடிக்கைகளை மேலும் வலுவாக்குவது, ரோந்துக் குழுக்களைக் கொண்டு பட்டியல் இல்லாமல் செல்லும் சரக்கு வாகனங்களை தணிக்கை செய்யும் பணியினை திறபம்பட செய்வது போன்ற பல முயற்சிகள் இத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் படி கடந்த அக். 4 முதல் 24 – 2021 வரை உள்ள காலத்தில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வணிகவரி நுண்ணறிவு பிரிவு அலுவலகங்கள் மூலமாக 38,542 வாகனத் தணிக்கைகள் மேற் கொள்ளப்பட்டு அவற்றில் 46,712 மின்னணு வழிப்பட்டியல்கள் சரிப் பார்க்கப்பட்டு, வழிப்பட்டியல் இல்லாமல் சென்ற 902 இனங்களில் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வரி மற்றும் தண்டத் தொகையாக ரூ. 4. 75 கோடி வசூல் செய்துள்ளனர்.
தமிழக அரசுக்கு வரவேண்டிய வரி வருவாய் எந்தவித ஏய்ப்புகளும் இன்றி வசூல் செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையில் இத்தகைய தணிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என வணிகவரித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.