வேலூர், நவ. 2 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் இன்று நடைப்பெற்ற அரசு விழாவில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு 3510 புதிய குடியிருப்புகள் மற்றும் முகாம்களில் அடிப்படை திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி முகாம் வாழ் தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் நலன் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த ஆக 27 – 2021 அன்று நடந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110 ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் கட்டித் தரப்படும். மேலும் முகாம்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் ஆண்டு தோறும் இலங்கைத் தமிழர் வாழ்க்கைத் தர மேம்பாட்டுநிதி ஒதுக்கீடு செய்யப்படும் பொறியியல் மற்றும் வேளாண் முதுநிலை பட்டப்படிப்பு மாணவ மாணவியருக்கு கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் வழங்குதல் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டுப் பயிற்சி சுயவுதவிக் குழுக்களுக்கு சழல்நிதி மற்றும் சமுதாய முதலீட்டு நிதி மாதாந்திர பணக்கொடை உயர்வு போன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
அதனை செயல் படுத்தும் விதமாக முதலமைச்சர் இன்று வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் நடைப்பெற்ற அரசு விழாவில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.142.16 கோடி மதிப்பீட்டில் 3510 புதிய குடியிருப்புகள் மற்றும் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 78 முகாம்களில் குடிநீர் மின்சாரம் சாலை வசதி போன்ற அடிப்படை திட்டப்பணிகள் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் 58, 747 நபர்களுக்கு ரூ.12.41 கோடி உயர்த்தப்பட்ட பணக்கொடை, 58,677 நபர்களுக்கு ரூ.4.52 கோடி மதிப்பீட்டில் இலவச கைத்தறி துணிமணிகள் 18,890 குடும்பங்களுக்கு ரூ.2.42 கோடி மதிப்பீட்டில் ஐந்து வகையான எட்டு எவர் சில்வர் பாத்திரங்கள், 18,890 குடும்பங்களுக்கு ரு.8.66 கோடி மதிப்பீட்டில் இலவச எரிவாயு உபகரணங்கள் மற்றும் மானிய விலையில் 5 எரிவாயு உருளைகள் 5000 நபர்கள் பயன் பெறும் வகையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் உபகரணங்கள், பொறியியல் வேளாண் மற்றும் வேளாண் பொறியியல் முதுநிலை மாணவ, மாணவியருக்கு ரூ.3.10 கோடி கல்வி மற்றும் விடுதிக் கட்டணத்திற்கான காசோலைகள், 940 மாணவ, மாணவியருக்கு ரு. 1.25 கோடி மதிப்பீட்டில் உயர்த்தப்பட்ட கல்வி உதவித்தொகை, 621 சுயவுதவிக் குழுக்களுக்கு ரூ.6.15 கோடி மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி, 106 முகாம்களுக்கு ரூ.5 கோடி வாழ்க்கை தர மேம்பாட்டு நிதி ரூ.19 இலட்சம் செலவில் இலவச அரிசி என மொத்தம் ரூ. 225 கோடியே 86 இலட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தையும் வழங்கி தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மேல்மொணவூர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து , அங்குள்ள இலங்கைத் தமிழர்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் முகாமில் உள்ள அங்கன்வாடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், நாடளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஜெகத்ரட்சகன், து.மு.கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார், பா.கார்த்திகேயன், திருமதி.அமலு விஜயன், ஜெ.எல். ஈஸ்வரன், ஏ.சி.வில்வநாதன், கே.தேவராஜ், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றஉறுப்பினர்கள், பொதுத்துறை செயலாளர் முனைவர் டி.ஜகந்நாதன் மறுவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையர் ஜெசிந்தா லாஸாஸ், வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.