சென்னை:

‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ் நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் கடந்த 11-ந்தேதி அறிவித்தார்.

விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத்தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்றார்.

இதற்காக ரு.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு துணை பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ரூ.2 ஆயிரம் வழங்கும் இந்த திட்டத்தை சென்னையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 4-ந்தேதி தொடங்கி வைக்கிறார்.

இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப்பெறுவார்கள்.

இந்த திட்டத்தில் பட்டியல் எடுக்கும் போது விடுபட்ட பயனாளிகள் இருந்தால் அவர்களுக்கும் ரூ. 2 ஆயிரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here