சென்னை, ஆக. 21 –
சென்னை, திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டு, வட சென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி கிடங்குகளை நேற்று மின்சாரம், மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் நிலக்கரியின் இருப்புக் குறித்த ஆய்வினை மேற் கொண்டனர்.
இந்த அனல் மின் நிலையத்தில் கப்பல் மூலம் கொண்டு வரப்படும் நிலக்கரி 1 ல் உள்ள உள் ஒதுக்கீடு கிடங்கில் உள்ள நிலக்கரிகள் இரயில் மூலம் மேட்டூர் 1 மற்றும் 11 அலகு அனல் மின் நிலையங்களின் பயன் பாட்டிற்காக எடுத்துச் செல்லப் படுகிறது. உள் ஒதுக்கீடு கிடங்கிலிருந்து வட சென்னை மின் நிலையம் 1 மற்றும் 11 அலகு பயன் பாட்டிற்காக அனுப்பி வைக்கப் படுகிறது. இவ்வலகுகளில் உள்ள நிலக்கரி கிடங்குளில் ஆய்வு நடத்தினர்.
பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பின் வருமாறு கூறியதாவது பதிவேட்டில் உள்ளதற்கும் கை இருப்பிற்கும் இடைப்பட்ட வகையில் ரூ.85 கோடி மதிப்பிலான 2 இலட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி வித்தியாசம் உள்ளதாகவும், அவ்வாறு மாயமான நிலக்கரி குறித்த தகவல்கள் முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனக் குறிப்பிட்டார்.
மேலும் இதுக் குறித்த இருப்பை சரிப்பார்க்க கூடிய பணியை இயக்குநர் ( உற்பத்தி ) இயக்குநர் ( வினியோகம் ) மற்றும் தலைமை நிதி கட்டுப்பாட்டு அலுவலர் ஆகிய மூன்று பேர்களும் சேர்ந்து கடந்த ஆக 6, மற்றும் 9 ஆம் தேதிகளில் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் அடிப்படையில் 2 இலட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி இல்லை என்ற தகவல் வரப் பெற்றுள்ளது. என்றார்.
இது முதற்கட்ட ஆய்வு எனவும் தொடர்ந்து முழுவதுமாக ஆய்வு செய்து மேலும் என்னென்ன முறை கேடுகள் நடந்துயிருக்கின்றன எப்படி இந்த நிலக்கரி இருப்பு பதிவேட்டில் இருப்பதற்கும், கையிருப்பில் இருப்பதற்கும் வித்தியாசம் வருகிறது. இதில் என்ன தவறு நடந்துயிருக்கிறது. என்பதை முழுவதுமாக கண்டறியப்பட்டு நிச்சயம் முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும். இதேப் போல் தூத்துக்குடி மற்றும் மேட்டூர் அனல் மின் நிலையங்களிலும் ஆய்வு பணிகள் மேற் கொள்ளப் பட்டு வருகிறது. இந்த ஆய்வின் அறிக்கை பெற்றவுடன் அதன் உண்மை நிலவரங்கள் தெரிவிக்கப்படும்.
மேலும் இந்த இருப்பு நிலவர கணக்குகள் விவரம் கடந்த 31.3.2021 வரை பதிவேட்டில் எடுக்கப் பட்டவையாகும். இந்த கணக்கு நிலவரப் பதிவேட்டின் படிதான் 2 இலட்சத்து 38 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பில் இல்லாமல் இருக்கிறது. இதனுடைய மதிப்பு சுமார் ரூ.85 கோடியாகும் என்றார்.
ஏற்கனவே ஆளுநர் உரையில் கடந்த சில ஆண்டுகளாக மின் வாரிய நிர்வாகத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் ஆய்வு செய்யப்படும் என மிகத் தெளிவாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. எனவே யார் தவறு செய்தாலும் தண்டிக்கப் படுவார்கள், யாரும் தவறுகளிலிருந்து தப்பிக்க முடியாது. நன்றாக உழைக்கக் கூடிய உயர் அலுவலர்களும் மின் வாரியத்தில் சிறப்பாக செயல் படுகிறார்கள். அவர்கள் உழைப்பையெல்லாம் வீணடிக்கப்பட்டு சீர் கெட்ட நிர்வாகத்தால் 1 இலட்சத்து 59 ஆயிரம் கோடி கடந்த ஆட்சியால் மின் வாரியத்திற்கு கடன் சுமை ஏற்பட்டுள்ளது. பொது மக்களிடம் இருந்து பெறப்படும் மின் கட்டணம் சரியான வகையில் மின் உற்பத்தி செய்யப் பட்டு ஏழை மக்களுக்கு வழங்க, சேவை செய்யக்கூடிய வாரியத்தில் இவ்வளவு பெரிய தவறுகள், முறை கேடுகள் நடந்து இருக்கிறது.
கடந்த கால அரசில், மோசமான நிர்வாகம் நடந்து இருக்கிறது. அப்படிப்பட்ட மோசமான நிலையில் இருந்து நிர்வாகத்தை மீட்டெடுத்து, வரக்கூடிய காலங்களில் தவறுகள் அனைத்தும் களையப்பட்டு வெளிப்படையான நிர்வாகத்தை மின் வாரியம் முன்னெடுக்க இருக்கிறது. இதுதான் தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவு என்றார். இவ் வாய்வில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி ஐ.ஏ.எஸ், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராஜன், மேலாண்மை இயக்குநர் எஸ். சண்முகம் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் உடன் இருந்தனர்.