திருவள்ளூர், டிச. 14 –

தமிழ்நாடு முழுவதும் 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கடனுதவியை இன்று (14.12.2021) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் நடைபெற்ற அரசு விழாவில் கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந் நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் இந்தியாவிலேயே முதன்முதலாக பெண்களுடைய பொருளாதார முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்த ஆட்சிதான் தலைவர் கலைஞர் தலைமையில் இருந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. அந்த ஆட்சியில்தான் இந்தக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் முதன் முதலில் தொடங்கியிருந்தாலும், அதைத் தொடர்ந்து  சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் அது தொடங்கப்பட்டது. அடுத்து வந்த ஆட்சி அந்தத் திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. நான் அரசியலாக்க விரும்பவில்லை. இந்த சுய உதவிக் குழுவின் வரலாறை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் கூறுகிறேன்.

1996 ஆம் ஆண்டு மீண்டும் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்குப் பிறகுதான் தமிழ்நாட்டின் 14 மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.  முதலில் 5177 சுய உதவிக் குழுக்களும், அதற்கு அடுத்த ஆண்டில் 7 மாவட்டங்களில் 6014 மகளிர் சுய உதவிக் குழுக்களும் – அதற்கு அடுத்த ஆண்டில் 8 மாவட்டங்களில் 15,029 சுய உதவிக் குழுக்களும் உருவாக்கப்பட்டது. இப்படியே அது வளர்ந்தது.

2006 ஆம் ஆண்டு நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது ஆயிரக்கணக்கு என்பது லட்சக்கணக்கு ஆனது.

இன்று தமிழ்நாடு  முழுவதும் 7.22 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை பெருமையோடு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இதில் ஒரு கோடியே 6 லட்சத்து 68 ஆயிரம் மகளிர் உறுப்பினராக இடம்பெற்றிருக்கிறார்கள்.

இத்தனை லட்சம் குழுக்கள் செயல்படுகிறது என்றால் – ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர் இதில் இயங்கி வருகிறார்கள் என்றால் – அதற்கு விதை போட்டவர் தான் நம்முடைய இதயத் தலைவர், முத்தமிழறிஞர்  தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை நான் அழுத்தந்திருத்தமாக மகிழ்ச்சியோடு தெரிவிக்க விரும்புகிறேன். அதனால் தான் மகளிர் நலம் காத்த மாண்பாளர் என்று தலைவர் கலைஞர் அவர்களை இன்றைக்கும் போற்றிக்கொண்டிருக்கிறோம்.

மகளிரை ஒருங்கிணைக்கிறோம் – கடன் கொடுக்கிறோம்- அதை அவர்கள் திருப்பிக் கட்டுகிறார்கள் – இது ஏதோ ஒரு வழக்கமான திட்டம் (ஸ்கீம்) என்று நினைக்கக்கூடாது.  எத்தனையோ கடன் கொடுக்கும் திட்டத்தைப் போல இதுவும் ஒரு திட்டம் என்று சொல்ல முடியாது.

ஒரு பெண், யார் தயவையும் எதிர்பார்த்துக் காத்திருக்காமல் அவரவர்கள் சொந்தக் காலில் நிற்பதற்கு, சொந்தக் காலில் நின்று அவர்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு அடித்தளம் அமைக்கக் கூடிய திட்டம் தான் இந்த மகளிர் சுய உதவிக் குழுத் திட்டம்.

v     சிக்கனத்தை உருவாக்குவது

v     அதன் மூலமாக சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவது

v     குடும்ப எல்லைகளைத் தாண்டி சிந்திக்கும் திறனை உருவாக்குவது

v     தானே சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவது

v     அனைவரும் சேர்ந்து கூட்டுறவு மனப்பான்மையுடன் வாழந்திட வேண்டும்,

எத்தனையோ நல்ல குணத்தை இக்குழுக்களில் இணைவதன் மூலமாக ஒரு பெண் பெறுகிறார்.

தனிமனிதர்களாக இல்லாமல் ஒரு குழுவாக வாழும் போது ஒரு பெண் தன்னம்பிக்கை பெறுகிறார். அத்தகைய தன்னம்பிக்கையை இந்தத் திட்டம் உருவாக்குகிறது.

இந்தத் திட்டத்தின் மகுடமாக இருப்பது சுழல் நிதி. இந்த சுழல் நிதி பெண்கள், பொருளாதாரத்தின் தலைநிமிர்ந்து நிற்க தூண்டுதலாகவும் அடிப்படையாகவும் அமைந்துள்ளது.

 

v     இந்த நிதி ஆண்டில் மட்டும் 17,479 சுய உதவிக் குழுக்களுக்கு

87.39 கோடி ரூபாய் சமுதாய முதலீட்டு நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது.

v     மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர் கண்டறியப்பட்டு 5838 சங்கங்கள் மூலமாக 14.59 கோடி ரூபாய் இந்த நிதி ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது.

v     மகளிர் தயாரிக்கும் பொருளுக்கு உரிய விலை கிடைக்கவும், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களைச் சந்தைப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

v     வட்டார அளவிலான கூட்டமைப்புகளை ஏற்படுத்துவதன் மூலமாக கூட்டுறவு வங்கிக் கடன்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

v     இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யும் முறை நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோதுதான் – 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

v     இதுவரை 36 லட்சத்து, 97 ஆயிரத்து 59 குழுக்களுக்கு ஒரு லட்சத்து

4 ஆயிரத்து 13 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

v     இந்த ஆண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தர இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

இதுவரை 6777 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த தொகை 10 ஆயிரம் கோடி ஆகிவிடும். அடுத்த ஆண்டுக்குள் அடுத்த 10 ஆயிரம் கோடி இலக்கை எட்டிட நான் உத்தரவிட்டுள்ளேன். சிறப்பு முகாம்கள் அமைத்து கடன் வழங்குவதை துரிதப்படுத்தவும் நான் கேட்டுக்கொண்டுள்ளேன்.

v     10 முதல் 20 லட்சம் ரூபாய் வரை சொத்துப் பிணையம் இல்லாமல் கடன் வழங்க குறுந்தொழில் கடன் உத்தரவாத நிதியும் வழங்கப்பட்டு வருகிறது.

v     ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளை உருவாக்கவும், அக்கூட்டமைப்புகளுக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கவும் உத்தரவுகள் போடப்பட்டுள்ளது.  இந்த வகையில் 10 இலட்சம் முதல் ஒன்றரைக் கோடி ரூபாய் வரை கடன் பெறலாம்.

v     மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

v     சான்று விதை உற்பத்தி மையம் செயல்படுகிறது.

v     இயற்கை பண்ணையம் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது.

v     விவசாயம், கைவினைப் பொருட்கள் செய்தல், உணவு பதப்படுத்தும் தொழில் செய்தல் ஆகியவை ஊக்கப்படுத்தப்படுகிறது.

v     இவை அனைத்துக்கும் மேலாக தேசிய ஊரகப் பொருளாதார புத்தாக்கத்திட்டம் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

v     மகளிர் சுய உதவிக்குழுக்களின் அனைத்துப் பொருட்களையும் சந்தைப்படுத்த வழிகாட்டி வருகிறோம்.

v     கழக ஆட்சியில் முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தை மீண்டும் புதுப்பித்து இருக்கிறோம்.

v     தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறோம்.

v     வறுமை ஒழிப்பு என்பதையும் தாண்டி, ஊரகத் தொழில் மேம்பாட்டுத் திட்டமாக இதனை வடிவமைத்துள்ளோம்.

இப்படி ஏராளமான திட்டங்களை நம்முடைய தமிழக அரசின் சார்பில்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களை தலைப்புச் செய்திகளாக மட்டுமே சொன்னேன். இவை அனைத்தையும் விரிவாகச் சொன்னால் பல மணி நேரம் ஆகும். ஒட்டுமொத்தமாகச் சொல்ல வேண்டுமானால், மகளிர் அனைவரையும் மேம்படுத்தும் மகத்தான திட்டங்களைத் தான் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இந்தத் தேர்தலை சந்திப்பதற்கு முன்பு நான் சொன்ன உறுதிமொழிகளை முழுமையாக நாங்கள் நிறைவேற்றிவிட்டோம் என்று நான் சொல்லவில்லை, படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நிறைவேற்ற முடியாமல் நாங்கள் விட்டுவிட மாட்டோம். அனைத்தையும் நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றியே தீருவோம் என்ற அந்த உறுதியை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

மகளிர் மேம்பாடு மூலமாக அவர்களது குடும்பமும்-அந்த குடும்பத்தின் மூலமாக சமூகமும் மேம்பாடு அடையும். சமூக மேம்பாட்டில் தான் இந்த மாநிலத்தின் மேம்பாடு அடங்கி இருக்கிறது.

திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கையில் ஒன்று, பெண்ணுரிமை, மகளிர் மேம்பாடு என்பதாகும். பெண்களுக்கு சொத்துரிமை வேண்டும் என்ற தீர்மானம் 1929 ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் நடத்திய சுயமரியாதை இயக்க மாநாட்டில் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தகைய தீர்மானத்தைப் போட்டவர் தந்தை பெரியார் அவர்கள். 1989 ஆம் ஆண்டு பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு என்ற சட்டத்தை நிறைவேற்றிக் காட்டியவர் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். அந்த சட்டத்தைக் கொண்டுவந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றுகிறபோது தலைவர் கலைஞர் சொன்னார், ”பெரியார் அந்த தீர்மானத்தைக் கொண்டு வந்த போது நான் ஐந்து வயது பையன். இன்று அவரது தீர்மானத்தை நான் சட்டமாகக் கொண்டு வரும் போது எனக்கு 65 வயது” என்று குறிப்பிட்டு அந்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொடுத்தார்.  இதனை நான் இங்கே சுட்டிக் காட்டுவதற்குக் காரணம், பெண்களின் உரிமைக்கான இத்தகைய புரட்சிகர சீர்திருத்தத்தை நூற்றாண்டுக்கு முன்பே முழங்கிய இயக்கம் தான் திராவிட இயக்கம் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அத்தகைய தலைவர் தான் தந்தை பெரியார் அவர்கள். அவர் வழி வந்த திராவிட முன்னேற்றக் கழகம் மகளிருக்கான ஏராளமான திட்டங்களைத் தீட்டி உள்ளது.

v     சொத்தில் பெண்களுக்கு சம உரிமை.

v     பணியிடங்களில் பெண்களுக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு.

v     உள்ளாட்சித் அமைப்புகளில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு.

v     கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித்தொகை.

v     விதவைகளுக்கு மறுவாழ்வுத் திட்டம்.

v     ஆரம்ப பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக பெண்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்கவேண்டும் என்ற சட்டம்.

v     ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த பெண்ணுக்கு திருமணம் என்றால், திருமணத்திற்கு உதவி செய்யக்கூடிய திட்டம் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில்தான் தலைவர் கலைஞருடைய ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது.

v     அனைத்துக்கும் மேலாக பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட திட்டம்தான் மகளிர் சுய உதவிக்குழு திட்டம்.

v     ஏழைப் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்புகள் வழங்கியது திமுக அரசு.

இப்படி பெண்களின் முன்னேற்றத்திற்காக எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறோம்.

நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றதும் – பொறுப்பேற்ற அன்றே மகளிருக்கு கட்டணமில்லாத பேருந்து பயணத்துக்கு உத்தரவிட்ட கைதான் இந்தக் கை.

ஐந்து பவுனுக்கு கீழ் அடமானம் வைக்கப்பட்டு பெற்ற கடனை ரத்து செய்தோம்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள் வாங்கிய கடன்கள் 2756 கோடி ரூபாய் ரத்து செய்யப்பட்ருக்கிறது.

அந்த வரிசையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 3000 கோடி ரூபாய்க்கு இன்று கடன் வழங்ககியிருக்கிறோம். இதன் மூலமாக தொழில் முனைவோர்களாக மட்டுமல்ல-தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும்  அனைத்து மகளிரும் உயர வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். அப்படி வாழ்வதற்கான, நீங்கள் உயர்வதற்கான அனைத்து உதவிகளையும் என்னுடைய தலைமையில் இருக்கக்கூடிய, மன்னிக்க வேண்டும், என்னுடைய தலைமையில் என்று சொல்லக்கூடாது, நம்முடைய ஆட்சி இப்போது நடந்துகொண்டிருக்கிறது, நம்முடைய ஆட்சியின் மூலமாக  இவைகள் எல்லாம் தொடரும், தொடரும் என்ற உறுதிகூறி, மீண்டும் சொல்கிறேன், இவ்வளவு அமைதியாக இந்த நிகழ்ச்சி நடந்திட காரணமாக இருந்த இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறி விடைபெற்றார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், பால்வளத்துறை அமைச்சர் சாமு.நாசர்,நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர்ச.சந்திரன்.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர். ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here