சென்னை:
சட்டசபையில் இன்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி பேசும்போது, “மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற தமிழக அரசு தகுந்த அழுத்தம் கொடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இதேபோல நிதியை கொடுக்காமல் இழுத்தடித்தது என்றார்.
தொடர்ந்து பேசிய ராமசாமி அடுத்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ப.சிதம்பரம் மீண்டும் நிதி அமைச்சர் ஆவார். நாங்களே பேசி நிதியை பெற்றுக்கொடுப்போம். மத்திய அரசிடம் நீங்கள் சிக்கிக் கொண்டு இருப்பதால் தான் நிதியை வாங்க முடியவில்லை என்றார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- ‘யாரிடமும் சிக்கவில்லை. தேவையான நிதியை போராடி பெற்று வருகிறோம்.
அமைச்சர் தங்கமணி:- காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது தி.மு.க.வை மிரட்டி கூட்டணிக்கு பணிய வைத்தது. அவர்களுக்கு சொந்தமான அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டது.
எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- குட்கா ஊழல் தொடர்பாக அமைச்சர் வீட்டிலும் தலைமை செயலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இது நமது மாநிலத்துக்கு தலைகுனிவு.
அமைச்சர் ஜெயக்குமார்:- மேற்கு வங்காளத்தில் சி.பி.ஐ. சோதனை நடந்தால் எதிர்க்கட்சி தலைவர் கண்டிக்கிறார். ஆனால் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் சோதனை நடந்த போது ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.
மு.க.ஸ்டாலின்:- தவறான தகவலை அமைச்சர் பதிவு செய்கிறார். வருமான வரி சோதனை நடந்தபோது முதல் நபராக கண்டனம் தெரிவித்தது நான் தான்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இடைத்தேர்தல் குறித்தும் அ.தி.மு.க.- தி.மு.க.வினரிடையே கடும் வாக்குவாதம் நடந்தது.