திருவண்ணாமலை பிப்.16-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக இரண்டு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ச.அருள்செல்வம் தற்காலிக பணிநீக்கம் செய்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு கடந்த 9ந் தேதி தொடங்கி 17ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் ஒரே மாதிரியாக அச்சிடப்பட்டு பொதுத் தேர்வுபோல் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து பிளஸ்2 தேர்வுக்கான கணித பாட வினாத்தாள் 10ம் வகுப்புக்கான அறிவியல் பாட வினாத்தாள் ஆகியவை சமூக வளைதலங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ச.அருள்செல்வம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், திருப்புதல் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக அரசு தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்குமார் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வந்தவாசி பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளகளில் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு நடத்தினார். இது தொடர்பான அறிக்கையை பள்ளி கல்வித்துறை ஆணையரிடம் வழங்கினார். இதையடுத்து பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார், சமூக வளைதலங்களில் வினாத்தாள் வெளியானது தொடர்பாக துறை ரீதியாக நடத்தப்பட்ட விசாரணையில் போளூர் ஆக்ஸிலியம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வந்தவாசி ஹாசினி இன்டர்நேஷனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து வினாத்தாள் வெளியானது கண்டறியப்பட்டது.
இதற்கு காரணமான பள்ளிகள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இத்தேர்வுகள் நடத்துவது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் வழிகாட்டுதலை சரியாக பின்பற்றாததையட்டி திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ச.அருள்செல்வம் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக (பொறுப்பு) நியமித்து பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.